சமூக ஊடகங்களில் ரம்யா பாண்டியனுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது ஒவ்வொரு பதிவையும் அவர் பகிரும் புகைப்படங்களையும் ஏராளமானோர் ரசித்துப் பார்த்து பாராட்டுகிறார்கள்.
கல்லூரியில் படித்தபோது தமக்கு திரைப்பட நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை என்கிறார் ரம்யா. அதேசமயம் குறும் படங்களில் நடிப்பது, கல்லூரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் இருந்ததாம்.
"பள்ளி, கல்லூரி நாள்களில் படிப்பதைத் தவிர நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். பாடுவது, நடனமாடுவது, நிகழ்ச்சித் தொகுப்பு என்று ஏதாவது ஒரு நிகழ்வில் என்னைப் பார்க்க முடியும்.
"அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது, திரையுலகப் பிரபலங்களை பல்கலை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதைப் பெருமையாகக் கருதுவோம். அந்தச் சமயத்தில் 'வில்லு' படம் வெளியீடு கண்டது. மாணவர்கள் மத்தியில் அந்தப் படம் குறித்து அதிகம் பேசப்பட்டது.
"எப்படியோ முயற்சி செய்து விஜய், அருண் பாண்டியன் ஆகிய இருவரையும் நிகழ்ச்சிக்கு வரவழைத்தோம். அந்த நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்கினேன்.
"எனினும் நான் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. உண்மையாகவே கல்லூரி நாள்களில் திரையுலகில் பணியாற்றுவது குறித்து நினைத்துக்கூடப் பார்த்ததில்லை," என்கிறார் ரம்யா.
'ஜோக்கர்', 'ஆண் தேவதை', 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என நல்ல படங்களில் நடித்திருந்தாலும் 'பிக்பாஸ்', 'குக் வித் கோமாளி' போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம்தான் ரசிகர்களிடம் ரம்யா நன்கு அறிமுகமாகி உள்ளார். கல்லூரி நாள்களில் சில குறும்படங்களில் நடித்துள்ளாராம்.
"புகைப்படங்களில் நான் அழகாக காட்சியளிப்பதாக சில நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருந்தனர். அப்போது ஒரு நண்பர் குறும்படத்தில் நடிக்க இயலுமா என்று கேட்டார். நட்புக்காக சம்மதித்தேன்.
"அந்தக் குறும்படத்தில் நடித்து முடிப்பதற்குள் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டேன். படப்பிடிப்பின்போது குறிப்பிட்ட ஒரு காட்சியில் நான் வாய்விட்டுக் கதறி அழ வேண்டும் என்றார் இயக்குநர். அந்தச் சமயத்தில் கண்களில் 'கிளிசரின்' போட்டுக்கொண்டால் அழுகை வரும் என்பதெல்லாம் தெரியாது. மனதில் எதையோ நினைத்துப் பார்த்து அழுதேன். எல்லாருக்கும் வியப்பு. பாராட்டுகளுக்கு மத்தியில் அந்தக் குறும்படத்தை திரையில் பார்த்தபோது எனது நடிப்பு என்னையும் வியக்க வைத்தது. நாமும் ஏன் நடிகையாகக் கூடாது என்ற எண்ணத்தை அந்தக் குறும்படம் என் மனதில் விதைத்தது," என்கிறார் ரம்யா.
தற்போது மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லி செரியின் இயக்கத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
"முன்பு 'ஜோக்கர்' படத்தில் எனது நடிப்பைப் பார்த்த மம்முட்டி எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். ஆனால் அவர் திட்டமிட்டிருந்த படத்தில் எனக்குப் பதிலாக 'ஜோக்கர்' படத்தின் இன்னொரு நாயகியான காயத்ரியை ஒப்பந்தம் செய்துவிட்டனர். அந்த நல்ல வாய்ப்பை நான் இழந்துவிட்டதாக நேரில் சந்தித்தபோது சொன்னார்.
"இப்போது மீண்டும் நல்ல வாய்ப்பு தேடி வந்துள்ளது. எனக்குப் பதிலாக வேறு முன்னணி நாயகியை ஒப்பந்தம் செய்திருக்கலாமே என்று படத்தின் இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு நான்தான் நாயகி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என்று அவர் கூறினார்.
"இந்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் மம்முட்டின் மனைவியாக நடிக்கிறேன். அதிக வசனங்கள் இல்லை. பெரும்பாலும் முக பாவங்கள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டியிருந்தது.
"மம்முட்டி போன்ற மூத்த கலைஞர்களுடன் நடிப்பது பெரிய வாய்ப்பு. அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். வழக்கமாக எனது நண்பர்கள் குழுவில் நான்தான் ஏதாவது நகைச்சுவைகளை சொல்லி சிரிக்க வைப்பேன். ஆனால் இவ்விஷயத்தில் மம்முட்டி என்னையே விஞ்சிவிட்டார்.
"அவர் நன்றாக சமைப்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது மலபார் பிரியாணி செய்து பரிமாறினார். அவ்வளவு பெரிய நடிகர், மிகுந்த அன்புடன் படக்குழுவினருக்குத் தாமே பிரியாணி பரிமாறியதைப் பார்த்து நெகிழ்ந்தேன்," என்கிறார் ரம்யா.
, :
தமிழகத்

