இயக்குநர் கே.விஸ்வநாத்.
பழம்பெரும் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் கே. விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 92.
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 51 படங்களை இயக்கியுள்ளார் விஸ்வநாத். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களையும் இயக்கியுள்ளார்.
1965ஆம் ஆண்டு ‘ஆத்மஹர்மான்’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கி திரையுலகில் அறிமுக மானார் விஸ்வநாத். பல வெற்றிப் படங்களை இயக்கி இருந்தாலும், ‘சங்கராபரணம்’ திரைப்படம்தான் இவருக்குப் பெரும் புகழைத் தேடி தந்தது.
கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய ‘சாகர சங்கமம்’ எனும் தெலுங்குப் படம் தமிழில் ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இரு மொழிகளில் இப்படம் புதிய சாதனைகளைப் படைத்தது.
இவர் இயக்கிய ‘சுவாதி முத்யம் (தமிழில் சிப்பிக்குள் முத்து)’ திரைப்படம் 1986ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியாவால் அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்டது. பல படங்களில் நடிப்பிலும் முத்திரை பதித்தவர் விஸ்வநாத்.