அழகுத் தோற்றத்தால் மட்டும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட முடியாது என்றும் திறமைதான் திரையுலகில் நீண்ட நாள் நீடிக்க கைகொடுக்கும் என்றும் சொல்கிறார் டிம்பிள் ஹயாதி.
‘வீரமே வாகை சூடும்’, ‘தேவி-2’ போன்ற பல திரைப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகமாக மாறியுள்ள இவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
“பெயரைக் கேட்டதும் வடஇந்தியப் பெண் என்று முடிவு கட்டிவிட வேண்டாம். நான் நெல்லைப் பெண். பிறந்தது தெலுங்கு மண்ணாக இருந்தாலும் திருநெல்வேலியைத் தான் எனது பூர்வீக மண் என்பேன்.
“எனது இயற்பெயர் தாட்சாயினி. ஆனால் வீட்டில் எல்லாருமே டிம்பிள் என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார்கள். பின்னாள்களில் எனது தோழிகளும் அதேபோல் அழைத்ததால், செல்லப் பெயரே இன்றுவரை நிலைத்துவிட்டது,” என்கிறார் டிம்பிள்.
அப்படியானால் ஹயாதி?
“எங்கள் வீட்டில் சிலருக்கு எண்கணிதத்தில் நம்பிக்கை அதிகம். அவர்கள்தான் டிம்பிள் என்ற பெயருடன் அதிர்ஷ்டத்துக்காக ஹயாதி என்பதை சேர்த்துவிட்டனர்,” என்று சொல்லும் டிம்பிள், தனது 19வது வயதில் ‘வளைகுடா’ என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார்.
“அதன் பிறகு தெலுங்கு நாயகன் ரவி தேஜாவுடன் ‘கில்லாடி’, ‘கடலகொண்ட கணேஷ்’, ‘யுரேகா’ உள்ளிட்ட பல தெலுங்குப் படங்களிலும் ‘அத்ரங்கி ரே’ என்ற இந்திப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இவரது தந்தை பழனிவேல் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். தாயார் விஜயவாடாவைச் சேர்ந்தவர்.
“இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். எனக்கு ஒரு தம்பி உள்ளார். அவரும் சில படங்களில் நடித்துள்ளார். ஐந்து வயதில் இருந்து குச்சுப்புடி நடனம் பயின்று வருகிறேன். திருப்பதியில் நடந்த விழாவில் குச்சுப்புடி ஆடினேன். அதைப் பார்த்து அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டியது மறக்கமுடியாத அனுபவம்.
“12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் புஷ்கர விழாவிலும் கின்னஸ் சாதனைக்காக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதன்பின்னரே திரைப்பட இயக்குநர்கள் தேடி வந்தனர். எனது குடும்பத்தினர் பாரம்பரியக் கலையில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் என்பதால் சிறு வயது முதலே பல்வேறு நடனங்களைக் கற்று வருகிறேன். எதிர்காலத்தில் என்னவாக விருப்பம் என்று குழந்தைகளிடம் கேட்டால் மருத்துவர், பொறியாளர் என்று பதில் கிடைக்கும். ஆனால் நான் சிறு வயதில் சினிமா நாயகியாக விருப்பம் என்றுதான் சொல்வேனாம்,” என்று சொல்லிச் சிரிக்கிறார் டிம்பிள்.
இவருக்குப் பிடித்த கதாநாயகன் அஜித் என்றால், உடன்பிறந்த தம்பி விஜய் ரசிகராம். ஆனால் இரு நடிகர்களின் புதுப் படங்கள் வெளியானால் ஒற்றுமையாக கிளம்பிச் சென்று அவற்றைப் பார்த்துவிடுவார்களாம்.
“பல்வேறு மொழிகளில் நடித்தாலும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். காரணம், தமிழில் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும்.
“இந்த விஷயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் எனக்கு முன்மாதிரி. தரமான, வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். அதனால்தான் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது.
“இனிமேல் வெறும் கவர்ச்சியும் பாடலும் நடனமும் எடுபடாது. எனவே நல்ல கதைகளில்தான் நடிக்க விரும்புகிறேன். குத்துப் பாடலும் கவர்ச்சியும் ரசிகர்கள் நினைவில் நெடுநாள் நீடிக்காது. ஆனால் நல்ல கதை, காலத்தை வென்ற கதாபாத்திரங்களை மறக்க இயலாது,” என்கிறார் டிம்பிள் ஹயாதி.
, :
தமிழகத்