குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு நாயகனாக அல்லது நாயகியாக நடிப்பதும் அதைக் கண்டு ரசிகர்கள் வியப்படைவதும் திரையுலகில் காலங்காலமாக நடந்து வரும் தொடர் நிகழ்வு. அவ்வாறு ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் அனிகா சுரேந்திரன்.
'விஸ்வாசம்', 'என்னை அறிந்தால்' ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்த இவர், இப்போது கதாநாயகி ஆகிவிட்டார். தெலுங்கில் உருவாகியுள்ள 'புட்டபொம்மா' படத்தில் அனிகாதான் கதாநாயகி.
இப்படத்தின் அறிமுக சுவரொட்டி தொடங்கி இப்போது வரை வெளிவந்துள்ள தகவல்களை ரசிகர்கள் தேடிப்பிடித்துப் படித்து வருகிறார்கள்.
கதாநாயகியாக வலம் வரப்போகும் அனிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்துமே கனவுபோல் இருப்பதாகச் சொல்கிறார் இந்த இளம் நாயகி. அதேசமயம் தனது கடின உழைப்பும் இந்த வெற்றிக்குக் காரணம் என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
"குழந்தை நட்சத்திரமாக எல்லோரின் மனதிலும் இடம்பிடித்தேன். இப்போது இன்னொரு சிறப்பு அம்சமாக கதாநாயகி ஆகி இருக்கிறேன். 'புட்டபொம்மா' மலையாளத்தில் வெளியான 'கப்பெலா' படத்தின் தெலுங்கு மறுபதிப்பு ஆகும்.
"எனக்கு இந்த வாய்ப்பை அளித்த படக்குழுவுக்கு நன்றி. இது நான் எதிர்பார்க்காத ஒரு வாய்ப்பு. எனினும், எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, எனது தேர்வு நியாயமானது என்பதை நிலைநிறுத்துவேன்," என்கிறார் அனிகா.
இப்படத்தில் ஒப்பந்தமான வேளையில் தெலுங்கில் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டாராம். அப்போது படக்குழுவில் இருந்த சிலர் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக்கொடுத்து பேச வைத்திருக்கிறார்கள்.
"ஒவ்வொரு தெலுங்கு வார்த்தைக்கும் சரியான அர்த்தத்தைச் சொல்லிக் கொடுத்தனர். மிக முக்கியமான வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்றும் பேசிக்காட்டினர்.
"அவர்கள் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை என்பதே உண்மை," என்கிறார் அனிகா.
உச்சரிப்பு என்பது திரைத்துறையில் மிக முக்கியமான அம்சம் என்று குறிப்பிடுபவர், வசனங்களின் அர்த்தத்தை உள்வாங்கி, நல்ல உச்சரிப்புடன் பேசினால்தான் ரசிகர்களின் மனதை நெருங்க முடியும் என்கிறார்.
"சிறு வயது முதலே எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். அஜித், நயன்தாரா, மம்தா மோகன்தாஸ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளோடு பணியாற்றியதை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
"நிறைய சாதித்துள்ள கலைஞர்களிடம் இருந்து திரைத்துறை சார்ந்த ஏராளமான விஷயங்களை, நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் எல்லாம் உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்ட போதிலும்கூட இன்றளவும் தன்னடக்கத்துடன் காணப்படுகிறார்கள்.
"ஏதோ இப்போதுதான் முதல் படத்தில் நடிப்பதுபோல் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் நிரூபிக்கவும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்கும்போது, 'நாம் எல்லாம் ஒன்றுமே இல்லை' என்று நினைக்கத் தோன்றுகிறது," என்கிறார் அனிகா.
திரையுலகில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாவதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஓடிடி தளங்கள் மூலம் திரையுலகம் வளர்ச்சி பெறும் என்கிறார்.
ஒரு படத்துக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு ஓடிடி தளங்களிலும் கிடைப்பதாகச் சொல்லும் இவர், உணர்வுபூர்வமான படபங்களில் நடிப்பதையே விரும்புவதாகச் சொல்கிறார்.
"திரையரங்கு சென்று படம் பார்ப்பது அலாதியான அனுபவம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
"அதேசமயம் வசூல் ரீதியிலும், உலகின் கடைக்கோடி ரசிகர்களையும் சென்றடையும் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கும்போதும் ஓடிடி தளங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன," என்கிறார் அனிகா.
இரண்டு தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து இவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

