அண்மைய பேட்டியில் தாம் தெரிவித்த கருத்துகளை ஒருதரப்பினர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக நடிகை பிந்து மாதவி கூறிஉள்ளார்.
மேலும், எத்தகைய விவகாரமாக இருந்தாலும் ஓர் ஆண் அதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது கதாநாயகனாக சித்திரிக்கும் ஊடகங்கள், அதே கருத்தை ஒரு பெண் தெரிவித்தால் எதிர்மறையாக விமர்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இத்தகைய பாகுபாடு வருத்தம் அளிக்கிறது. ஒரு பெண்ணை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவது சிலருக்குப் பிடித்திருக்கிறது. என்னைப் போல் முப்பது வயதைக் கடந்த பெண்கள் ஏதாவது சாதிக்கத் துடிக்கும்போது, எதிர்ப்புகளைச் சந்திக்கின்றனர்.
"இந்தப் பெண் காணாமல் போய்விடுவாள், ஏதும் சாதிக்க முடியாது என்று காதுபடச் சொல்வார்கள். இதையெல்லாம் நானும் அனுபவித்திருக்கிறேன். அதேசமயம் துணிவான, வலுவான பெண்கள் முன்பு அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது.
"ஒரு பெண் தனது தரப்பு கருத்துகளை, நியாயங்களை உரக்கச் சொல்லத் தவறுவதில்லை. ஆனால் அவற்றுக்கு மதிப்பளிக்க மாட்டார்கள். ஆனால் ஓர் ஆண் மட்டும் கதாநாயகனாகப் பார்க்கப்படுகிறார். இந்தப் போக்கு மாறவேண்டும்," என்கிறார் பிந்து மாதவி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மனதில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என்பதுதான் உண்மை என்றும் அந்த நிகழ்ச்சி தமக்கு தேவையான தன்னம்பிக்கையையும் வெற்றியையும் கொடுத்தது என்றும் சொல்கிறார்.
"எனக்குள் இருந்த திறமையும் மன உறுதியையும் அந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்ததாக பலர் கூறினர். எனக்குள் ஒளிந்துகிடந்த சில அம்சங்களை அந்த நிகழ்ச்சி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாக சிலர் கூறியதும் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
"எனக்குத் தேவைப்பட்ட ஓர் அங்கீகாரத்தை பெற்றுத் தந்த நிகழ்ச்சி என்று அதைக் குறிப்பிடலாம். இனிமேலும் எனக்கு அத்தகைய தளங்கள் தேவைப்படாது. எனக்கென ரசிகர் கூட்டம் உள்ளது என்பதையும் அவர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்பதையும் நன்கு உணர்ந்துள்ளேன்," என்கிறார் பிந்து மாதவி.
சமுதாயத்தின் பிரதிபலிப்புதான் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி என்று குறிப்பிடுபவர், அந்நிகழ்ச்சியில் வெற்றிபெற வேண்டுமானால் பிக்பாஸ் வீட்டில் யாரிடமும் மோதாமல் அமைதி காக்க வேண்டும் என்று பலர் தமக்கு அறிவுறுத்தியதாகச் சொல்கிறார்.
அந்த நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்குத் தாம் அறிமுகமாகி இருப்பதாகவும் தமிழில் சரளமாக பேச அந்நிகழ்ச்சி தூண்டுகோலாக இருந்தது என்றும் கூறுகிறார் பிந்து.
"தமிழ் ரசிகர்கள் என்னையும் அவர்களுடைய குடும்ப உறுப்பினராகவே பார்க்கின்றனர். உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் என்னை வரவேற்று ஆதரிக்கிறார்கள்.
"எல்லாவற்றையும்விட முக்கியமாக என் பெற்றோரையும் ரசிகர்கள் பாராட்டுவது என்னை நெகிழ வைத்திருக்கிறது. மிக துணிச்சலும் சமுதாயப் பொறுப்பும் கொண்ட மகளைப் பெற்றுள்ளதாக பிறர் பாராட்டும்போது என் பெற்றோர் அடையும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
"இப்படித்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் ரசிகை ஒருவர் வீடு தேடிவந்து என்னை வாழ்த்திச் சென்றார். என்னைத்தான் அவர் தனது முன்மாதிரியாகக் கொண்டிருப்பதாகவும் கூறினார்," என்கிறார் பிந்து மாதவி.
எத்தகைய கதை, கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று அண்மைய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டபோது, கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என இவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடிப்பதற்கு நடிகைகள் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டதாகச் சொல்கிறார்்.
, : தமிழகத்

