மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பெரும் வெற்றிபெற்ற 'திரிஷ்யம்' படம் ஹாலிவுட்டிலும் மறுபதிப்பாக உள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து வெளியீடு கண்ட இப்படம் இந்திய அளவில் வசூலை வாரிக்குவித்தது.
இதையடுத்து தமிழில் 'பாபநாசம்' என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்தனர். அதில் கமல்ஹாசனும் கௌதமியும் இணைந்து நடித்திருந்தனர்.
பின்னர் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இப்படம் மறுபதிப்பாக வசூலைக் குவித்தது. 'திரிஷ்யம்' இரண்டாம் பாகமும் வசூலில் சோடை போகவில்லை. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் நாடு முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் கண்டது.
இந்நிலையில் 'திரிஷ்யம்' படத்தின் இரு பாகங்களையும் ஹாலிவுட் திரையுலகில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். இதற்காக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
மேலும் ஜப்பான், கொரிய மொழிகளிலும் இப்படத்தை மறுபதிப்பு செய்ய உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹாலிவுட் மறுபதிப்பை தயாரிக்கப் போகும் நிறுவனம், அதில் பணியாற்ற உள்ள இயக்குநர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் காவல்துறை அதிகாரியின் மகனை கதாநாயகி கொலை செய்கிறார்.
அதன் பின்னர் கொலையுண்ட இளையரின் சடலத்தை மறைக்க குடும்பத் தலைவன் போராடுகிறார்.
இதில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருந்ததோடு, வசனங்களும் கச்சிதமாக அமைந்திருந்தன.
மேலும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி பதிப்புகளிலும் நடித்தவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

