இந்தியாவின் நைட்டிங்கேல் என்று குறிப்பிடப்படும் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை சாந்தி பிரியா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக சாந்தி பிரியா கூறியுள்ளார். நடிகர் ராமராஜன் நடித்த 'எங்க ஊரு பாட்டுக்காரன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் சாந்தி பிரியா. அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் பிறகு திரையுலகில் இருந்து ஒதுங்கிவிட்டார். அவருக்குத் தற்போது 54 வயதாகிறது. இந்நிலையில், சமூக ஊடகங்க ளில் பதிவிட்டுள்ள அவர், "நாட்டை தட்டியெழுப்பி, தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காகப் பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை முறையில் செய்யும் உடற்பயிற்சியால் பலன் அதிகம் என்கிறார் கீர்த்தி சுரேஷ். இது தொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் காணொளிப் பதிவு ஒன்றையும் வெளி யிட்டுள்ளார். தன் வீட்டில் உள்ள திறந்தவெளிப் பகுதியில் அமைக்கப்பட் டுள்ள சிறிய பூங்காவில் அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இயற்கையோடு மனம் ஒன்றிய நிலையில் உடற்பிற்சி செய்யும்போது உடல், மனதளவில் பெரும் உற்சாகம் கிடைக்கும்," என்கிறார் கீர்த்தி. தற்போது 'சைரன்', 'ரகு தாத்தா', 'ரிவால்வர் ரீட்டா' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.
ரஜினி நடித்து இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியான 'பாபா' படத்தில் சில மாற்றங்களைச் செய்து அண்மையில் மீண்டும் வெளியிட்டனர். இந்த மறுவெளியீட்டின் மூலம் கிடைத்துள்ள வசூல் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாம். இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் அண்மையில் சிறப்புப் பரிசு அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

