"இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு 'ருத்ரன்' படம் மூலம் கிடைத்துள்ளது. ஓர் எளிய மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அவற்றால் ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்தும் இந்தப் படம் விவரிக்கிறது.
"அனைத்தையும்விட, சிக்கல்களில் இருந்து அவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதை சுவாரசியமாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர்," என்று பாராட்டுகிறார் ராகவா லாரன்ஸ்.
'காஞ்சனா' படத்துக்குப் பிறகு லாரன்சும் சரத்குமாரும் மீண்டும் இணைந்துள்ள படம் இது.
தனுஷின் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'நய்யாண்டி', அருள்நிதியின் 'டைரி' உட்பட பல படங்களைத் தயாரித்த எஸ்.கதிரேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகி உள்ளார்.
"எனக்கு ராகவா லாரன்சை நான்கைந்து ஆண்டுகளாகத்தான் தெரியும். குறுகிய காலகட்டத்தில் எனக்குள் ஒளிந்திருந்த இயக்குநரைக் கண்டுபிடித்துள்ளார். அவர் எல்லாரையும் தேடிச்சென்று உதவுவார் என்பது அனைவருக்கும் தெரியும். நட்பையும் உயர்வாக மதிக்கக் கூடியவர் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.
"திடீரென ஒருநாள் என்னை அழைத்து இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார். நான் தயார் செய்து வைத்திருந்த 'ருத்ரன்' கதையைச் சொன்னபோது வியந்தார்.
"என்னிடம் இருந்து இப்படிப்பட்ட கதையை அவர் எதிர்பார்க்கவில்லை. அறிமுக இயக்குநராக நினைக்காமல், எனக்காக சில சமரசங்களைச் செய்துகொண்டு நடித்து முடித்துள்ளார் லாரன்ஸ்.
"இவரையும் சரத்குமாரையும் ஒன்றாக வைத்து படப்பிடிப்பை நடத்தியபோது படபடப்பாக இருந்தது. ஆனால் இருவரும் எனது பதற்றத்தைப் போக்கி, சிறப்பாக நடித்து ஒத்துழைத்தனர். நல்ல மனிதர்களின் அன்பால் எதையும் சாதிக்க முடியும்," என்கிறார் இயக்குநர் கதிரேசன்.
ஏற்கெனவே தனுஷை வைத்து படங்களைத் தயாரித்து இருப்பதால், இயக்குநரான பிறகு தனுஷை வைத்துதான் கதிரேசன் படம் இயக்குவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் நினைத்திருந்தனராம். ஆனால் தாமே எதிர்பாராத வகையில் லாரன்ஸுடன் கைகோத்துள்ளதாகச் சொல்கிறார்.
"வாழ்க்கையில் நாம் எப்போதுமே ஏதேனும் ஓர் இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருப்போம். ஆனால் அதற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்கள் நடக்கும். அப்படித்தான் இயக்குநராகி உள்ளேன்," என்கிறார் கதிரேசன்.
ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'ருத்ரன்' கதை உருவாகி உள்ளது. பிரச்சினைகளால் துரத்தப்படும் கதாநாயகன் ருத்ரனாக லாரன்ஸ் அசத்தி உள்ளாராம்.
"கடந்த 1980களில் பிறந்தவர்கள் முதல் இன்றுள்ள இளையர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என விரும்பினோம். அதற்கேற்ப திரைக்கதை அமைத்து அசத்தி உள்ளார் கதிரேசன். தனிப்பட்ட வகையில் இது எனக்கு மிகவும் பிடித்தமான படம்," என்கிறார் லாரன்ஸ்.
படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர் வழக்கம்போல் இயல்பாக நடித்துள்ளாராம். நாயகனின் தந்தையாக நாசர், தாயாக பூர்ணிமா பாக்யராஜ், சரத் லோகிதாஸ், காளிவெங்கட் என்று பல தெரிந்த முகங்கள் உள்ளன.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு திரையில் ஒலித்த 'பாடாத பாட் டெல்லாம் பாட வந்தாள்' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனராம்.
சென்னை, கோவை, பொள்ளாச்சி, ஹைதராபாத், லண்டன் எனப் பல்வேறு இடங்களில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.
"சரத்குமார் 'காஞ்சனா' படத்தில் மிரட்டலாக நடித்திருப்பார். ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லாரன்ஸ் உடன் மீண்டும் இணந்துள்ளார். 'தனி ஒருவன்' அரவிந்த்சாமி, 'இரும்புத்திரை' அர்ஜுன் போன்று இப்படத்தில் சரத் சாரின் தோற்றமும் நடிப்பும் வித்தியாசமாக இருக்கும்.
"இது வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் சரத்குமாரின் தோற்றமும் மாறிக்கொண்டே இருக்கும். அவரும் லாரன்சும் மோதும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும். அந்த அளவுக்கு இருவரும் கடுமையாக உழைத்துள்ளனர்," என்று சொல்லும் கதிரேசன், தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளார்.
அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் 'அதிகாரம்' படத்தை இயக்க உள்ளார் கதிரேசன்.
, :
தமிழகத்

