அனைவரும் ஒருவருக் கொருவர் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் சமந்தா. யார் எந்த பிரச்சினைக்காகப் போராடுகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்துவிடாது என்றும் அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
"எனவே, விவரம் தெரியா விட்டாலும் எல்லாரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள். இதுவே எனது அறிவுறுத்தல்," என்று தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
விமான நிலையங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
விமான நிலையத்தில் விமானப் புறப்பாடுக்காக சில மணி நேரம் காத்திருக்கும் வேளையில், பயணிகள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்ல மாற்றமாக இருக்கும் என்று சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"விமானப் பயணத்துக்காக குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வர வேண்டியுள்ளது. அதன் பிறகு எதையாவது யோசித்தபடியே பொழுதைப் போக்க வேண்டி இருக்கும். ஒருவேளை விமான நிலையத்தில் உடற்பயிற்சிக் கூடம் இருந்தால், வீணாக யோசிப்பதைவிட, உடற்பயிற்சி செய்திருக்கலாமே என்று தோன்றும். இது நல்ல ஆலோ சனை என நினைக்கிறேன். என்னைப்போல் பலருக்கு இந்த ஏற்பாடு பயனளிக்கும் என நம்புகிறேன்," என்கிறார் ராஷ்மிகா.
இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க ஆயிஷா என்ற புதுமுகம் தேர்வாகி உள்ளார்.
மருது சகோதரர்களின் வாழ்க்கை 'மருது ஸ்கொயர்' என்ற பெயரில் திரைப் படமாகிறது. பெரிய மருது, சின்ன மருதுவின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்தப் படம் உருவாகிறது.
மேலும், மருது சகோதரர்களுக்கு முன் மாதிரியாக விளங்கிய, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான வேலு நாச்சியார் பாத்திரத்துக்கு இப்படத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேலு நாச்சியார் பாத்திரத்துக்கு ஆயிஷா தேர்வாகி உள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு 'மிஸ் சென்னை' அழகிப் பட்டம் வென்றவர்.
தனது கதாபாத்திரத்துக்காக தீவிர சண்டைப் பயிற்சி பெற்று வருகிறார் ஆயிஷா. வாள் சண்டை, சிலம்பாட்டம், குதிரையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகளுக்குப் பிறகு தமது பாத்திரத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

