அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி வருகின்றன. இதனால் திரைக் கலைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் தேடி வருவதுடன், அவர்களுடைய வருமானமும் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் மொழி கடந்து அதிக படங்களில் நடிக்கின்றனர். மேலும் ஓடிடி தளங்களும் அதிகரித்து வருவதால் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் அதிகரித்துள்ளது.
பொதுவாக, குணச்சித்திர, எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் காட்டில்தான் நல்ல மழை.
சத்யராஜ், சமுத்திரக்கனி, சரத்குமார் போன்றவர்களுக்கு தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
அதேபோல், நடிகைகளில் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் போன்ற இளம் நாயகிகளுக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன.
நாயகியை மையப்படுத்தி உருவாகும் கதைகள் பல்வேறு மொழிகளில் வெளியாவதால் அத்தகைய படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள படங்களின் மறுபதிப்பு, மொழி மாற்று உரிமைகள் நல்ல லாபத்தைப் பெற்றுத் தருவதாகத் தகவல்.
'பாகுபலி' படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான், தாம் நாடு தழுவிய அளவில் நன்கு அறிமுகமான நடிகராக மாறி உள்ளதாகச் சொல்கிறார் சத்யராஜ்.
தற்போது பல்வேறு மொழிகளில் தவிர்க்க முடியாத நடிகராகவும் வளர்ந்துள்ளார் என்பதுடன், நாயகனாக நடித்தபோது பெற்ற ஊதியத்தைவிட, இப்போது அதிகம் பெறுவதாகச் சொல்கிறார்.
பிற மொழிகளில் கதாநாயகர்களுக்கு இணையாக சமுத்திரக்கனிக்கு ஊதியம் கிடைக்கிறது. குணச்சித்திர, வில்லன் என்றாலே பிற மொழி இயக்குநர்கள் சமுத்திரக்கனியைத் தேடுகிறார்கள்.
சரத்குமாருக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'புஷ்பா' படத்தின் மூலம் அனைத்திந்திய நடிகராக அவரும் வளர்ச்சி கண்டுள்ளார்.
தமிழில் நாயகனாகவும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அங்கு திரைப்படங்கள், இணையத்தொடர் என்று பரபரப்பாக வலம்வருகிறார்.
நடிகைகளில் சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அனைத்து மொழி ரசிகர்களும் ஆதரவு அளிக்கின்றனர். அவரது படங்கள் வசூல் ரீதியில் தோல்வி கண்டாலும், சாய் பல்லவியின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
இந்தியிலும் வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, அவர் மருத்துவச் சேவையாற்றப் போவதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. ஆனால், தொடர் வாய்ப்புகள் அவரது மனதை மாற்றியுள்ளதாம்.
மேலும் இரண்டு ஆண்டுகள், சில படங்களில் நடித்து முடித்த பிறகு அவர் முழு நேர மருத்துவராகப் பணியாற்ற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இந்தி மொழியில்தான் அதிக கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷைப் பொறுத்தவரை, நடிப்பில் எந்தக் குறையும் வைத்ததில்லை. எனினும், அவர் தனி நாயகியாக நடித்த படங்களின் வசூல் குறைவாக உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், பல மொழிகளில் படத்தை வெளியிடும்போது லாபம் கிடைப்பதால், தயாரிப்பாளர்கள் அவரை தொடர்ந்து நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கிடையே, இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சஞ்சய் தத் உள்ளிட்ட மூத்த நடிகர்களுக்கு தென்னிந்தியாவிலும் கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்து வருகிறது.
சாய் பல்லவி
, :
தமிழகத்

