கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து வாழும் நடிகர் தனுஷுக்கும் அவரது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிக்கும் இடையே மறைமுக மோதல்கள் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
'வாத்தி' படம் வெளியாகி உள்ள நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.
இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்கான பணிகளையும் அவர் தொடங்கி உள்ளாராம். அவரது இயக்கத்தில் வெளியான 'பா.பாண்டி' படத்துக்கு விமர்சன ரீதியில் பாராட்டுகள் கிடைத்தன.
இதையடுத்து விஷ்ணு விஷாலை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதான் அவரது முன்னாள் மனைவியுடனான மறைமுக மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளதாம்.
ஐஸ்வர்யா தற்போது திரையுலகம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, அவர் இயக்கும் படத்துக்கு 'லால் சலாம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியானது.
இந்தப் படத்தில் அதர்வாதான் முதலில் நாயகனாக ஒப்பந்தமானார். சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து விஷ்ணு விஷால் இப்படக்குழுவுடன் இணைந்தார்.
இந்நிலையில், தனுஷும் தன் படத்தில் நடிக்க விஷ்ணுவை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்கிடையே, 'லால் சலாம்' படப்பிடிப்பின்போது விஷ்ணு, ஐஸ்வர்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலக விஷ்ணு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஷ்ணு எடுத்துள்ள முடிவின் பின்னணியில் தனுஷ் இருக்கலாம் என்றும் சில ஊடகங்கள் கிசுகிசு வெளியிடுகின்றன. ஆனால் தனுஷ் இது குறித்தெல்லாம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
விஷ்ணு சம்மதிக்கும் பட்சத்தில் தனது இயக்கத்தில் உருவாகும் படத்தில் அவர்தான் நாயகன் என்று அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இல்லையெனில் வேறு நடிகரை அணுகுவதே அவரது திட்டமாம்.
அதேபோல் தனது படத்தில் இருந்து விஷ்ணு விலகும் பட்சத்தில் வேறு கதாநாயகனை அணுகுவது என்பதே ஐஸ்வர்யாவின் முடிவாம்.

