'வாத்தி' படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் நடிகை சம்யுக்தா. இப்படத்தில் மீனாட்சி என்ற ஆசிரியை கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
படப்பிடிப்பின்போது தமது பள்ளி நாள்களை மனதில் அசைபோட்டதாகவும் சொல்கிறார் சம்யுக்தா.
"நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பள்ளிக்காலம் மிக ஆனந்தமான, அழகான காலம் என்பேன். என் பள்ளி நாள்களை இன்னும் மறக்கவில்லை.
"எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களில் பெரும்பாலானோரை இன்னும் நினைவில் வைத்துள்ளேன். அவர்கள் எப்படிப் பேசுவார்கள், பாடம் நடத்துவார்கள், அவர்களுடைய உடல்மொழி என அனைத்தும் எனக்கு அத்துப்படி.
"அவர்களைப் பார்த்து நான் தெரிந்துகொண்டவை, கற்றவை ஆகியவற்றின் உதவியோடுதான் 'வாத்தி'யில் நடித்தேன்.
"அதனால்தான் எனது நடிப்பு இயல்பாக இருந்ததாக ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டுகிறார்கள்," என்று சொல்லும் சம்யுக்தா, வணிகப் படங்களில்தான் அதிக கவனம் செலுத்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதை தாம் மறுக்கவில்லை என்று குறிப்பிடும் அவர், திரையுலகில் தனது பயணத்துக்கான ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்துடன் எடு்த்து வைப்பதாகச் சொல்கிறார்.
"எனது திரையுலகப் பயணத்தின் முக்கியமான காலக்கட்டத்தில் உள்ளேன். இப்போது நான் புதுமுகம் அல்ல. அதேசமயம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களில் நடித்து முடித்துள்ள அனுபவ நடிகை என்றும் சொல்ல இயலாது.
"எனது பயணத்தின் பாதி தூரத்தை எட்டிப்பிடிக்க உள்ளேன் என்பதுதான் உண்மை. இதுபோன்ற சூழலில் எனக்கான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் தகுதி எனக்கு வந்துவிட்டதாகக் கருதவில்லை.
"தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும்போது நாமே சிந்தித்து முடிவெடுக்கலாம். நமக்கு ஒத்துவரக்கூடிய வேகத்தில் முன்னேறிச் செல்லலாம்.
"ஆனால் தொழில் என்று வரும்போது இதுபோன்ற வேகத்தைக் கடைப்பிடிக்க முடியாது. கொஞ்சம் நிதானம் தேவை," என்று முதிர்ச்சியுடன் பேசுகிறார் சம்யுக்தா.
நாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கும் இருப்பதாகக் குறிப்பிடுபவர், அதுபோன்ற வாய்ப்புகள் இப்போதுதான் தன்னைத் தேடிவரத் தொடங்கியுள்ளதாகச் சொல்கிறார்.
"தனி நாயகியாக நடிக்க விருப்பம் உள்ளது. ஆனால் இவ்விஷயத்தில் என்னால் அவசரப்பட இயலாது.
"நல்ல கதையும் கதைக்களமும் அமைய வேண்டும் என்பதுடன், அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட வேண்டும்.
"தனி நாயகியாக நடிப்பது மிகப்பெரும் பொறுப்பு. வணிக ரீதியிலான படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. காரணம், அந்தப் படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து, பொறுப்பைச் சுமப்பது அந்த கதாநாயகர்கள்தான்.
"அவர்களால் மிகப்பெரும் ரசிகர் கூட்டத்தை திரையரங்குக்குப் படையெடுத்து வரவழைக்க முடிகிறது," என்கிறார் சம்யுக்தா.
ஒரு படத்தில் பணியாற்றும் அனைவரும் மனதார தங்களுடைய உழைப்பை வெளிப்படுத்தும்போது அப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று குறிப்பிடுபவர், இதுபோன்ற வெற்றிகளைத் தாம் கண்கூடாகப் பார்த்ததுண்டு என்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடிப்பது உற்சாகம் அளிப்பதாகவும் அனைத்து திரையுலகங்களிலும் பட உருவாக்கப் பணிகள் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன என்றும் சொல்கிறார்.
"நான் விரும்பியபடி பெயரும் புகழும் கிடைத்து வருகிறது. ஆனால் இவற்றுக்கான விலையாக நமது தனிமையை இழக்க நேரிடும். அவ்வப்போது இந்தப் புகழும்கூட மனதில் சலிப்பை ஏற்படுத்திவிடும். அதுபோன்ற தருணங்களில் இருந்து மீண்டுவர வேண்டும் எனில் புகழ் வெளிச்சத்தில் இருந்து சில காலம் மாயமாகிவிட வேண்டும். இதைத்தான் நான் பின்பற்றி வருகிறேன்.
"சில நடிகைகள் ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது, பயணங்கள் மேற்கொள்வது என சோர்வில் இருந்து மீண்டு வருவதற்கு, பல்வேறு வழிமுறை களைக் கையாள்வதை அறிவேன். எனக்குத் தனிமைதான் நல்ல தீர்வாக அமைகிறது.
"ஒருசிலரைப் போன்று சமூக ஊடகங்களில் கவனம் செலுத்துவதிலும் எனக்கு விருப்பம் இல்லை. என் வாழ்க்கையில் எளிமையைக் கடைப்பிடிக்க விரும்புகிறேன். ஏனெனில் எளிமையும் தனிமையும் வாழ்க்கையில் பல்வேறு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. ," என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் இளம் நாயகி சம்யுக்தா.

