தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் மயில்சாமி (படம்) நேற்று காலமானார். அவருக்கு வயது 57. திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்தார் மயில்சாமி. நேற்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மயில்சாமியின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் பிறந்தவர் மயில்சாமி.
கடந்த 1984ஆம் ஆண்டு, கே.பாக்யராஜ் இயக்கிய 'தாவணிக் கனவுகள்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் மயில்சாமி. அடுத்த ஆண்டிலேயே 'கன்னிராசி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
'என் தங்கச்சி படிச்சவ', 'அபூர்வ சகோதரர்கள்', 'வெற்றி விழா' எனப் பல்வேறு படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
பெரிய கதாபாத்திரங்கள் அமையாவிட்டாலும் ரசிகர்கள் தன்னை திரையில் அடையாளம் காணக்கூடிய வகையில் கதாபாத்திரம் அமைந்தால் போதும் என்றும் ஒரேயொரு நிமிடம் வரக்கூடிய கதாபாத்திரத்தின் மூலமாகவும்கூட ரசிகர்களைக் கவர முடியும் என்றும் அடிக்கடி சொல்வார் மயில்சாமி.
திரைப்படங்களில் நடித்தபடியே நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமூக ஆர்வலர் எனப் பல்வேறு தளங்களில் கால்பதித்து சாதித்த மயில்சாமி, தனது மனதில்பட்ட கருத்துகளை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். திரையுலகம் சார்ந்த சர்ச்சைகள், சமூகம் சார்ந்த விவகாரங்களில் இவர் எத்தரப்பையும் சாராமல் நடுநிலையுடன் தெரிவித்த கருத்துகளுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மயில்சாமி. கடைசியாக 'உடன்பால்' எனும் ஒரு படத்தில் நடித்தார். 'மர்ம தேசம்' தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார் மயில்சாமி. மேலும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் செய்தார். 'அசத்த போவது யாரு', 'சிரிப்போ சிரிப்பு' உள்ளிட்ட நகைச்சுவைப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் செயல்பட்டுள்ளார்.
தொடக்க காலங்களில் பலகுரல் மன்னனாக விளங்கியவர் மயில்சாமி. அவரது 'மிமிக்ரி' நிகழ்ச்சிகள் இளையர்களை வெகுவாகக் கவர்ந்தன. மிகுந்த இரக்க குணம் கொண்ட அவர், ஏராளமானோருக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்துள்ளார். அவரது இரக்க குணத்தை விவேக் பலமுறை நெகிழ்ந்து பாராட்டி உள்ளார். ஒருமுறை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகவும் போட்டியிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய விவேக், வடிவேலு ஆகிய இருவருடனும் நெருக்கமாக இருந்த மயில்சாமி, இருவரது படங்களிலும் நடித்து வந்தார்.
விவேக் மறைந்தபோது பெரிதும் மனமுடைந்து போன மயில்சாமி, 'மனித வாழ்க்கை என்பது இவ்வளவுதான், புரிந்துகொள்ளுங்கள்' என்று தெரிவித்திருந்தார்.
"விவேக் போன்ற பெரும் கலைஞர்கள் எக்காலமும் நம்முடன் இருப்பார்கள். அவர்கள் நடித்துச் சென்ற திரைப்படங்கள் பொக்கிஷங்களாக நம்முடன் இருக்கும். அப்படிப்பட்ட கலைஞர்களின் இழப்பை எண்ணி வருந்துவதைவிட, அவர்களின் புகழ்பாடி பெருமை சேர்க்க வேண்டும்," என்றும் மயில்சாமி கூறியிருந்தார்.
இப்போது, அந்த வரிகள் மயில்சாமிக்கும் பொருத்தமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.