அண்மைக் காலமாக இளம் நாயகி காஷ்மீரா பர்தேசி குறித்து ஊடகங்களில் தொடர்ந்து ஏதாவது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இளையர்கள் மனதைக் கவர்ந்த நடிகைகளின் பட்டியலில் காஷ்மீராவுக்கு இடம் கிடைத்துள்ளது என்கிறார்கள் திரை விமர்சகர்கள். சமூக ஊடகங்களில் காணப்படும் அவரைப் பற்றிய பதிவுகளை பலரும் பரவலாகப் பகிர்கிறார்கள்.
"ஒரு நடிகையாக எனக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ரசிகர்களின் இந்த நிபந்தனையற்ற அன்புதான் என்னை நெகிழ வைக்கிறது. இந்நிலை நீடிக்க வேண்டும் என்ற ஆசையும் எதிர்பார்ப்பும் உள்ளது," என்கிறார் காஷ்மீரா.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'வசந்த முல்லை'. இதில் தனது நடிப்பு நன்றாக இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருப்பது உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"ஒருவன் தூங்காமல் இருப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இந்தப் படம் விவரிக்கிறது. வித்தியாசமான கதைக்கரு என்பதால் தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர் என்னிடம் கதையை விவரித்தபோது, முதல் பாதியில் இடம்பெறும் காட்சிகள் குறித்து கேட்டதுமே நடிக்கச் சம்மதித்துவிட்டேன்.
"நடிப்பு தொடர்பான சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் இந்தப் படம் உதவியது. அதனால், இனிவரும் காலங்களில் வெறும் வணிகப் படங்களின் கதாநாயகி என்றில்லாமல், என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைக்களங்களாகத் தேர்வு செய்து நடிப்பேன்," என்கிறார் காஷ்மீரா.
நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைகள் தேடி வருகின்றனவாம். திரையுலகில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நிச்சயம் அதன் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்று நம்புவதாகச் சொல்கிறார்.
"அண்மையில் 'யசோதா' படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. என்னைப் பொறுத்தவரை '96' படம் கூட நாயகியை மையப்படுத்திய கதை என்றுதான் சொல்வேன். ஒரு கதாநாயகியாக, பெண்ணாக இதுபோன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
"'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில்கூட பெண்களை அதிகார மையத்திற்கு உட்படுத்தியே காண்பித்து இருப்பார்கள். வணிகப் படமோ, பெண்களை முன்னிலைப்படுத்தும் கதைக்களமோ, எதுவாக இருந்தாலும் நமக்கான கதாபாத்திரம் எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதே முக்கியம்.
"இந்த அடிப்படையில்தான் நான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்து வருகிறேன். அது நல்ல பலனைத் தருகிறது," என்கிறார் காஷ்மீரா.
'பர்ஃபி' படத்தில் பிரியங்கா சோப்ராவும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயும் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், புராணக் கதைகளில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார்.
"சிறு வயதில் எனது பாட்டி ஏராளமான கதைகளைச் சொல்வார். அவர் புராணக் கதைகளை விவரிக்கும்போது என்னையே மறந்துபோவேன். பல மணி நேரங்கள் எனக்காக கதை சொல்வார் பாட்டி. அப்போது புராணக் கதைகளில் ஏற்பட்ட ஆர்வம் இப்போதும் நீடிக்கிறது.
"அடுத்து ஹிப்ஹாப் ஆதியுடன் 'பிடி சார்', 'பரம்பொருள்' ஆகிய இரு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கிலும் இந்தியிலும் தலா ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன்," என்கிறார் காஷ்மீரா.
தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு என கணிசமான நேரத்தை ஒதுக்குவதாகக் குறிப்பிடுபவர், இதன் மூலம் உடல்நலன் மட்டுமல்லாமல் மன நலனையும் பேண முடியும் என்கிறார்.
மற்ற துறைகளைப் போலவே ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும் மன அழுத்தம், சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் என்றும் அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை நிச்சயம் கைகொடுக்கும் என்றும் சொல்கிறார்.
"சினிமாத்துறை என்றில்லாமல் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கு ஏதேனும் ஒருவகையில் அழுத்தம் தரக்கூடிய விஷயங்கள் இருக்கும். இந்த கசப்பான உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், சினிமாத்துறையில் வேலை தொடர்பாக இருக்கும் அழுத்தம், எதிர்பார்ப்பு குறித்து என்னிடம் எந்தவிதமான புகாரும் இல்லை.
"இதுபோன்ற சிக்கல்கள் இருக்கும் என்பதை தெரிந்துகொண்ட பிறகே நடிக்க வந்திருக்கிறேன். எனவே பிரச்சினைகளுக்கு மத்தியில் நமக்கான பாதுகாப்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு பணியில் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன்," என்கிறார் காஷ்மீரா.
, :
தமிழகத்

