சம்பளம், கால்ஷீட் என எந்த வகையிலும் தயாரிப்பாளருக்கோ இயக்குநருக்கோ தொல்லை தராத நடிகை என்ற நல்ல பெயரை சம்பாதித்துள்ளார் சாய் பல்லவி (படம்).
அண்மைக் காலமாக நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் கவனம் செலுத்தி வருபவர், 'கார்கி' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் மிதக்கிறாராம்.
'மாவீரன்' படத்திற்குப் பிறகு 'ரங்கூன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் சாய் பல்லவி.
அதையடுத்து நாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்தப் புதிய படத்தில் நடிகர் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்.
"தனக்கான கதாபாத்திரமும் கதைக்களமும்தான் முக்கியம் என்று நினைக்கும் நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். திரைச்சந்தையில் உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன், யதார்த்த நடிகர் விதார்த் என யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க அவர் தயார்.
"விதார்த் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பில் போட்டிபோட விரும்புகிறார் சாய் பல்லவி.
"இதுபோன்ற போட்டிகள்தான் ஒரு திரைப்படத்தின் தரத்தையும் அதன் மீதான எதிர்பார்ப்புகளையும் அதிகப்படுத்தும். இதுவே ரசிகர்கள் சாய் பல்லவியை ஆதரிக்கக் காரணம்," என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

