திரைப்பட கதாநாயகர்களின் சம்பளத்துக்கு இணையாக நாயகிகளின் சம்பளமும் பல கோடிகளில் உச்சம் தொட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா என்ற நிலை மாறி இப்போது அனைத்து மொழிக்குமான பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன.
இதனால், கதாநாயகர்கள் தங்கள் சம்பளத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர். அதேபோல கதாநாயகிகளும் இப்போது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி உள்ளனர்.
ஷாருக்கான் - தீபிகா படுகோன் (படம்) இணைந்து நடித்த 'பதான்' படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்தப் படம் மூலம் தீபிகா படுகோனுக்கு மவுசு கூடி உள்ளதால் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்.
தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கி வரும் புதிய படத்தில் தீபிகா படுகோனுக்கு ரூ.18 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் அதிக சம்பளம் பெறும் நடிகையாக அவர் மாறியிருக்கிறார். 'புரோஜெக்ட் கே' படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், திஷா பதானி ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.
தீபிகாவைப் போலவே முன்னணி கதாநாயகிகள் பலரும் தங்களது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம்சரணை நாயகனாக வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தில் நடிக்க கியாரா அத்வானிக்கு ரூ.4 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
பிரபாஸ் ஜோடியாக 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாக நடிக்க கிருதி சனோன் ரூ.5 கோடி பெற்றுள்ளார்.
பிரபல இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க ரூ.5 கோடி கொடுத்துள்ளனர். அது ஒரு சின்ன கதாபாத்திரம் என்றாலும் அவ்வளவு தொகை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடிக்கும் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க இருக்கிறார். அவர், ரூ.5 கோடி சம்பளமாகக் கேட்டதாகவும் அதன்பிறகு ரூ.4 கோடிக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவின் சம்பளம் ரூ.10 கோடி வரை உயர்ந்துள்ளது.
ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை சமந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு முன்னதாக ரூ.8 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்பட்டது. குந்தவையாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள நடிகை திரிஷா ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், ரூ. 3 கோடி சம்பளம் வாங்குவதாகவும் விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை சாய் பல்லவி ரூ. 2 கோடி சம்பள மாக வாங்கி வருகிறார். இவர் சிவகார்த்தி கேயனுடன் இணைந்து 'மாவீரன்' படத்தில் நடிக்கிறார். கதையின் நாயகியாக இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. 'திருச்சிற்றம்பலம்' படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகை நித்யா மேனன் ரூ.2 கோடி வரை சம்பள மாக வாங்கி வருகிறார். குறுகிய கால கட்டத்தில் முன்னணி நடிகைகளின் வரிசை யில் இடம்பிடித்துள்ள பிரியங்கா மோகன் ரூ.1 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

