ஒருவரது உருவத்தை வைத்துக் கேலி செய்வதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இப்போது ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்து வரும் இவர், "என்னைக் கேலி, கிண்டல், நையாண்டி செய்தவர்களுக்கு எல்லாம் என் வெற்றிகள் மூலம் சரியான பதிலடி கொடுத்துவிட்டேன். குறிப்பாக, சினிமாவில் சாதிப்பதற்கு உருவம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்," எனக் கூறியுள்ளார். "யாமிருக்க பயமே' என்ற படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற பாத்திரத்தில் நடித்ததை அடுத்து, பலரும் அவ்வாறே அழைத்து என்னைக் கேலி செய்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடித்து கதையின் நாயகனாக உருவெடுத்து உள்ளேன். இப்போது, நான் இல்லாத படங்களே இல்லை," எனப் பெருமைப்படுகிறார்.
பிரகாஷ்ராஜுக்கான வில்லன் பாத்திரங்கள் ஓய்ந்துள்ள நிலையில், அவரது இடத்தைப் பிடிக்க விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் போட்டியில் குதித்துள்ளனர்.
அதேசமயத்தில், தெலுங்கில் வெளியான 'புஷ்பா' படத்தில் வில்லனாக நடித்த சுனில், தமிழில் ரஜினியின் 'ஜெயிலர்', சிவகார்த்திகேயனின் 'மாவீரன்', கார்த்தியின் 'ஜப்பான்', விஷாலின் 'மார்க் ஆண்டனி' என ஒரே சமயத்தில் நான்கு படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இதனால், முன்னணி வில்லனாக உருவெடுக்க விரும்பிய மற்ற நடிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
'மயோசிட்டிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, "அந்த எமனுக்கே பயத்தைக் காட்டி தற்போது மீண்டும் திரையுலகில் அதிரடியாக நுழைந்துள்ளேன்," எனக் குறிப்பிட்டுள்ளார். வந்த வேகத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு, 'இனிமேல் சமந்தாவால் சினிமாவில் கால்பதிக்க முடியாது. கதை முடிந்து விட்டது," என்று சிலர் கிண்டல் செய்தனர். "நான் நெருப்பில் போட்டாலும் மீண்டும் எழுந்து பறக்கும் ஒரு பீனிக்ஸ் பறவை. எனது நடிப்புப் பணி விரைவில் தொடங்கும்," எனக் கூறியுள்ளார்.

