தனது நீண்ட நெடிய கலையுலகப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 275 திரைப்படங்கள் வரை நடித்திருந்த கலையுலக தேவதை ஸ்ரீதேவி மறைந்து ஐந்து ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
வசந்தகால நதியினில் வலம் வந்து, செந்தூரப் பூவாய் சில்லென்ற காற்றில் மலர்ந்து, கண்ணே கலைமானே என கவி பாடி, கன்னி மயிலாய் உருவெடுத்து, காலைப் பனியில் ஆடும் மலராய் காட்சி தந்து, கவிக்குயிலாய் கானம் பாடி, காற்றில் கீதமாய் ஒலித்து, இளமை எனும் பூங்காற்றாய் பலரின் இதயங்களில் வாழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் என்ற கள்வனால் களவாடப்பட்டு காற்றில் கரைந்தார். அவரின் இழப்பு ஐந்து மொழி ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
1970, 80களில் தமிழ் திரையுலகின் தனிப் பெரும் நாயகியாக திகழ்ந்தார். அழகு, திறமை இரண்டும் ஒருங்கே அமையப் பெற்ற ஆற்றல் மிகு நடிகையாக அறியப்பட்டார்.
1969ஆம் ஆண்டு வெளிவந்த 'துணைவன்' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் ஸ்ரீதேவி.
தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் 1976ஆம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'மூன்று முடிச்சு' திரைப்படத்தின் மூலம் தற்போதைய முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்துடன் கதாநாயகியாக நடித்தார்.
1970, 80களில் கமல், ஸ்ரீதேவி ஜோடி தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு ஒரு வெற்றி ஜோடியாக பார்க்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசனோடு மட்டும் ஏறக்குறைய 27 திரைப்படங்கள் வரை இணைந்து நடித்திருக்கின்றார் நடிகை ஸ்ரீதேவி.
'16 வயதினிலே' திரைப்படத்தின் இந்தி மறுபதிப்பான 'சோல்வா சாவன்' என்ற திரைப்படத்தின் மூலம் 1979ஆம் ஆண்டு முதன் முதலாக நாயகியாக இந்தி திரையுலகில் தடம் பதித்தார்.
தொடர்ந்து பல இந்தி திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவி இடம்பிடித்தார்.
இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ விருது' உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்று தனது வாழ்நாள் முழுவதும் கலையுலகிற்கு பெருமை தேடித்தந்த சீர்மிகு திரைக்கலைஞராகவே வாழ்ந்திருந்தார் ஸ்ரீதேவி.
இணையற்ற நடிப்பை தந்து, அனைவரின் மனங்களில் நின்று, தமிழ் மண்ணை மறந்து, விண்ணை அடைந்த இந்த மண்ணின் மகளான, நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளான நேற்று அவரின் ரசிகர்கள் அவரைப்பற்றி வலைத்தளங்களில் தங்களின் ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.