ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் 'ஹாலிவுட் கிரிட்டிக்ஸ்' விருது விழாவில் ஐந்து விருதுகளை வென்றிருக்கிறது.
'பாகுபலி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்' இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய அல்லூரி சீதாராம ராஜூ, கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும் பீமாவாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்தப் படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. படம் வெளியானது முதல் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் சாதனை படைத்தது.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஜப்பானில் வெளியானது. அங்குள்ள மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று அங்கும் நல்ல வசூலை ஈட்டியது.
குறிப்பாக ஜப்பானில் முன்னதாக வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படம் என்று சாதனை படைத்திருந்த ரஜினியின் 'முத்து' படத்தின் வசூலைவிட அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படமாக 'ஆர்ஆர்ஆர்' மாறியது.
அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் இடம்பெற்று வரவேற்பை பெற்ற 'நாட்டுக் கூத்து' பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருதையும் வென்றது.
சிறந்த பாடலுக்கான விருது பட்டியலில் 'நாட்டுக் கூத்து' பாடல் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் ரிஹானா, லேடி காகா, டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோரின் பாடல்களைக் கடந்து இந்தப் பாடல் வெற்றி பெற்றது. அந்தப் பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு 'ஆர்ஆர்ஆர்' படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்
படம் என்ற பிரிவில் தேர்வு ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த பாடல் பிரிவில் மட்டும் நாட்டுக் கூத்து பாடல் இடம்பெற்றது. அதனால் தளர்ந்து போனது படக்குழு.
அந்த தளர்வை நீக்கும் வகையில் தற்பொழுது 'ஹாலிவுட் கிரிட்டிக்ஸ்' விருது விழாவில் சிறந்த சண்டை, சிறந்த அனைத்துலக திரைப்படம், சிறந்த பாடல், சிறந்த ஸ்பாட்லைட், சிறந்த ஆக்ஷன் ஆகிய பிரிவுகளில் ஐந்து விருதுகளை வென்றிருக்கிறது.
'ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்' நடத்தும் இந்த விருது விழாவில் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான பிரிவில் பல ஹாலிவுட் படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் விருதை கைப்பற்றி உள்ளது. இயக்குநர் ராஜமெளலிக்கும் அவரது படக்குழுவினருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.
விருதுகளைப் பெற நடிகர் ராம் சரண் சிகப்பு வண்ண கோட் அணிந்துகொண்டு சிறந்த சண்டைக்கான விருதை மேடை ஏறி வாங்கிய காட்சிகளும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை இயக்குநர் ராஜமெளலி வாங்கிய காட்சிகளும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தினால் இந்திய திரையுலகம் ஹாலிவுட் அளவிற்கு உயர்ந்திருப்பது தெரிகிறது என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரும் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
எதிர்வரும் மார்ச் 13ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள ஆஸ்கர் விருது விழாவில் இந்தப் படத்தின் 'நாட்டுக் கூத்து' பாடல் வெற்றி பெற்றால், இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 'பிளாக் பாண்டர்' படத்தின் 'வக்காண்டா ஃபாரெவர்' பாடல் மட்டுமே 'ஆர்ஆர்ஆர்' நாட்டுக் கூத்து பாடலுக்கு கடும் போட்டியாக உள்ளதாக கூறுகின்றனர். இயக்குநரும் மற்றவர்களும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்குப் பிறகுதான் தாய்நாடு திரும்புவது என்ற முடிவில் அங்கேயே தங்கி உள்ளனர்.