திரைத்துளிகள்

திரைத்துளிகள்

2 mins read
d7ae298b-09fb-45f2-8866-f1113ba2f104
-

இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'இன் கார்'. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. "ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எந்த அளவுக்கு மன பாதிப்புக்கு உள்ளாகிறாள் என்பதை நுணுக்கமாக இந்தப் படம் சொல்லும். இந்தப் படத்தில் நடித்த பிறகு என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை 'இன் கார்' படம் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்," என்கிறார் ரித்திகா சிங்.

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மனு ஜேம்ஸ், தற்போது 'நான்சி ராணி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயதாகும் மனு ஜேம்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்திற்கு இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். இளையராஜாவை அண்மையில் சந்தித்த நாயகன் நாகசைதன்யா, "மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய இசையை மனதில் வைத்து பல படங்களில் நடித்திருக்கிறேன். என் படத்திற்கு அவர் இசையமைத்தது உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்," என்று கூறினார்.

இந்தி நடிகை ஆலியாபட் அண்மையில் வீட்டுக்குள் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது ஆலியாபட் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடிகர்-நடிகைகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "ஒவ்வொரு மனிதருக்கும் சொந்த வாழ்க்கை உள்ளது. சில விஷயங்களை பகிரங்கப்படுத்த விரும்பமாட்டார்கள். ஆலியாபட் போன்ற நடிகைகளை பார்த்தால் நிச்சயம் படங்கள் எடுத்துக்கொள்ள தோன்றும். அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடாது. எல்லை மீறினால் அது தாக்குதலுக்கு சமம் என்பது என் கருத்து. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும்," என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் ராஷி கண்ணா.