ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் இணைந்து 'ருத்ரன்' படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஒரு பாடல் அண்மையில் வெளியானது. அது பலராலும் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.
'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற 'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்' என்ற பாடலை 'ருத்ரன்' திரைப்படத்திற்காக மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.
ஏ.சி.திரிலோகசந்தர் இயக்கத்தில் 1962ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வீரத்திருமகன்'. இந்தத் திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன் எழுதிய பாடல் 'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்' என்ற பாடலை பி.பி ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். இந்தப் பாடல் அந்த காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்பொழுது இந்தப் பாடலை 62
ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு செய்துள்ளனர். இசையை மாற்றியுள்ள நிலையில் கண்ணதாசன் எழுதிய வரிகளில் படக்குழுவினர் எதையும் மாற்றவில்லை.
இந்தப் பாடலை இசையமைப்பாளர் தரண் குமார் மறு உருவாக்கம் செய்துள்ளார். மேலும் சத்ய பிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கட்ராமன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆனால் இந்தப் பாடலுக்கு மட்டும் தரண் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகஉள்ளது.

