எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகிறது 'றெக்கை முளைத்தேன்' திரைப்படம். நாயகியை முன்னிலைப்படுத்தும் இப்படத்தில், தான்யா ரவிச்சந்திரனும் சசிகுமாரும் இணைந்து நடித்துள்ளனர்.
"கல்லூரியில் கால்பதிக்கும் போதுதான் பல பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். புதிய இறக்கைகள் கிடைத்ததுபோல் பறப்பதுபோல் உணர்வார்கள். எனினும், இந்தச் சமயத்தில் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்," என்கிறார் தான்யா ரவிச்சந்திரன்.
விஜய்சேதுபதியுடன் தான்யா இணைந்து நடித்த 'கருப்பன்' படத்தைப் பார்த்தபோது அவரது நடிப்பால் பெரிதும் கவரப்பட்டதாக கூறுகிறார் பிரபாகரன்.
தான்யாவின் முதிர்ச்சியான நடிப்பும் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப அவர் தம்மை மாற்றிக்கொண்டதும்கூட பிரபாகரனுக்குப் பிடித்துப்போனதாம்.
"அனைத்தையும்விட தான்யா தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர், ஒரு நடிகர் அல்லது நடிகை குறித்து ரசிகர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அவர் இப்படித்தான் நடிப்பார் என்ற மனப்பிம்பமும் இருக்கக்கூடும்.
"ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, அதை ரசிக்கவும் வைப்பதில்தான் இயக்குநரின் திறமை அடங்கியுள்ளது. அந்த கோணத்தில் யோசித்துத்தான் தான்யாவை இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க வைத்துள்ளேன். அவரும் என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அற்புதமாக நடித்துள்ளார்," என்கிறார் பிரபாகரன்.
இதுவரை மென்மையான காதலியாக, மனைவியாக திரையில் தோன்றி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற தான்யா, காவல்துறை அதிகாரியாக கம்பீரம் காட்டியிருப்பது படக்குழுவினரைக்கூட வியக்க வைத்துள்ளதாம்.
ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட் என்று இந்தப் படத்தில் பல தெரிந்த முகங்கள் உள்ளன. மேலும் நான்கு புதுமுகங்களையும் அறிமுகப்படுத்துகிறாராம்.
'கிடா' படத்துக்கு இசையமைத்த தீசன்தான் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.
"இது பெண் சுதந்திரம் குறித்துப் பேசும் படமா என்று கேட்கிறார்கள். அனைத்து கேள்விகளுக்கும் படத்தில் விடை இருக்கும். பொதுவாக, கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பாக வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும்போது பெரிய அளவில் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கருதுவது இயல்பு.
"தனியாக வெளியே சென்றுவர முடியும், கைப்பேசியில் தோழிகளுடன் பேச முடியும், பள்ளிச் சீருடையைக் கைவிட்டு நினைத்த ஆடைகளை உடுத்திக்கொண்டு வலம்வர முடியும் என பல விஷயங்கள் சாத்தியமாகும் காலமிது.
"மொத்தத்தில், இறக்கை முளைத்து பறக்கும் பருவம் அது. எனினும், சுதந்திரமாக பறக்க நினைக்கும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அந்தச் சிக்கல்கள் குறித்து இந்தப் படத்தில் அலசியுள்ளோம்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். ஒரே சமயத்தில் இயக்குநர், தயாரிப்பாளர் என இரு பொறுப்புகளையும் சுமக்கிறார்.
"இயக்குநராக என் மனதில் பல சிந்தனைகள் தோன்றிய வண்ணம் இருக்கும். ஒவ்வொரு யோசனையையும் செயல்படுத்துவது தயாரிப்பாளரின் பொறுப்பு. அந்த வகையில், ஒரு பட உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் தயாரிப்பாளராக முன்னோக்கி நகர்த்திச் செல்வது நிச்சயம் பெரிய சுமைதான்.
"ஒரு படத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெற வேண்டும் என்பதுதான் இயக்குநரின் விருப்பமாக இருக்கும். அதே சமயம் தயாரிப்பாளர் என்ற வகையில் செலவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.
"இருதரப்பிலும் சில விட்டுக்கொடுத்தல்கள் இருக்க வேண்டியது அவசியம் என்ற போதிலும், படத்தின் தரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் இருக்கக்கூடாது. எனினும், நானே தயாரிப்பாளர் என்பதால் முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட முடிகிறது. அது எனக்கு மனநிறைவை அளித்துள்ளது," என்கிறார் பிரபாகரன்.
, :
தமிழகத்

