'இன் கார்' படத்தில் நடித்து முடித்துவிட்ட போதிலும், அந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் தன்னால் வெளிவர முடியவில்லை என்று நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ்வர்தன் இயக்கத்தில், அவர் நடித்துள்ள இப்படம் நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகி உள்ளது. கொடூர மனம் கொண்ட சிலரால் கடத்தப்படும் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். அந்தப் பெண்ணின் வலியை விவரிக்கும் படம் இது.
"நடந்துவிட்ட கொடூரச் சம்பவத்தை அவர் தனது பார்வையில் எடுத்துச் சொல்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
"இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிடுகின்றனர். இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இந்தப் படம் தமக்குப் பெரும் சவாலாக இருந்ததாக ரித்திகா குறிப்பிட்டார்.
"கடத்தப்படும் ஒரு பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்கிறாள் என்பதை இப்படம் நுணுக்கமாகச் சொல்லும். இதில் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் இருந்து என்னால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை இப் படம் ஏற்படுத்தி உள்ளது," என்றார் ரித்திகா.