"ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் பின்னணியிலும் ஓர் அழுத்தமான காரணம் இருக்கும். இதை அடிப்படை யாக வைத்து உருவாகி உள்ளது 'கண்ணை நம்பாதே' படம்," என்கிறார் அதன் இயக்குநர் மு.மாறன். உதயநிதி ஸ்டாலினும் ஆத்மிகாவும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், சதீஷ், பூமிகா, மகிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு தற்போது வெளியாகி உள்ளது.
மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் ஸ்ரேயா. இவர் நடித்துள்ள 'கப்சா' இந்திப் படம் எதிர்வரும் மார்ச் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா நெருக்கடி காரணமாக மொத்த திரையுலகமும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடுபவர், இனி தாம் வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ள தாகக் கூறுகிறார். தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்வேன். ஏனெனில் சங்கர் உள்ளி்ட்ட பெரிய இயக்குநர்கள் தமிழ்ப் படங்களில் எனக்கு நல்ல கதாபாத்திரங்களை அளித்துள்ளனர். "அதே நேரத்தில், நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் நடிக்கும் படங்களை, நாளை என் மகள் ராதா வளர்ந்து பெரியவளாகும்போது பார்த்து பெருமைப்பட வேண்டும்," என்கிறார் ஸ்ரேயா.
தமக்கு திருமணமாகிவிட்ட தாக, வேண்டும் என்றே ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி வருவதாகச் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்.
இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியைக் காதலிப்பதாக கடந்த 2021ஆம் ஆண்டு இவர் அறிவித்தார். அப்போது முதல் இவரது திருமணம் குறித்து ஏதாவது ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. "எனக்கு எப்போது திருமணம் நடந்தது என்று யாரேனும் சொல்ல முடியுமா? கடந்த ஆண்டு நவம்பரில் என் திருமணம் நடந்துவிட்டதாக தகவல் பரப்பினார்கள். அது எப்படி நடந்தது என்று அவர்களையே கேட்க வேண்டும் என நினைக்கிறேன்," என்கிறார் ரகுல் பிரீத்.

