இந்தியத் திரையுலகுக்கு இது நல்ல காலம் எனலாம். கொரோனா நெருக்கடியில் இருந்து விடுபட்ட பின்னர் முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களைப் போல் தமிழ்ப் படங்கள் சில முக்கியமான சாதனைகளைப் புரியவில்லை என ஒரு தரப்பு புலம்புகிறது. அதாவது, இன்றுவரை எந்த தமிழ்ப் படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனையைப் புரியவில்லை என்பதுதான் அந்தத் தரப்பின் ஆதங்கம்.
இந்திய சினிமா உலகைப் பொறுத்தவரையில் ஐந்து படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளன. அப்படங்களின் தயாரிப்புத் தரப்பு வெளிப்படையாக இவ்வாறு அறிவித்த பிறகே அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
அந்த ஐந்து படங்களில் இரண்டு பாலிவுட்டின் தயாரிப்புகள் ஆகும். அமீர்கான் நடிப்பில் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தங்கல்', அண்மையில் சில சர்ச்சைகளுக்கு வித்திட்ட 'தவான்' ஆகிய படங்களே அந்தப் பெருமைக்குரியவை.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கி பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலைக் குவித்தது. அதே ராஜமவுலி இயக்கி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடிப்பில் உருவான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படமும் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டியது.
கன்னட சினிமா தரப்பில் அதிரடிக் காட்சிகளுடன் வெளியான 'கேஜிஎப் 2' படமும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.
ஆனால் தமிழில் இதுவரை எந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கண்டதில்லை. சங்கர் இயக்கி, ரஜினி நடிப்பில் வெளியான '2.0' படம் மட்டுமே ரூ.1000 கோடியை நெருங்கியது. மற்ற திரைப்படங்கள் அனைத்தும் ரூ.300 கோடி, ரூ.400 கோடி என்ற அளவில் வசூலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எந்தப் படம்தான் ரூ.1,000 கோடி வசூலைக் குவிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சங்கர் இயக்கி வரும் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் இந்த மனக்கவலையைப் போக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மிகுந்த பொருள் செலவில் உருவாகும் அந்தப் படம் அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் திரைகாணக்கூடும்.

