கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் தாம் நடிப்பதற்கு இயக்குநர்கள் அளிக்கும் ஆதரவே முக்கிய காரணம் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இயக்குநர்கள்தான் தமது பலம் என்றும் 'சொப்பன சுந்தரி' படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"இயக்குநர் நினைத்தால் கதாநாயகர்கள், நாயகிகளை திரையில் பார்க்கும்போது பிரமிப்பையும் பிரம்மாண்டத்தையும் ஏற்படுத்த இயலும். ஏனெனில் கதையையும் கதாபாத்திரங்களையும் திரையில் காட்சிப்படுத்தும் பொறுப்பு அவரிடம்தான் உள்ளது.
"அந்த வகையில் 'சொப்பன சுந்தரி' படத்தின் இயக்குநர் சார்லஸ் கச்சிதமாகச் செயல்பட்டுள்ளார். எனினும் ஒரு கட்டத்தில் இந்தப் படத்தை என்னை வைத்து இயக்கப்போவதில்லை என்று அவர் கோபத்தில் முடிவெடுத்துவிட்டார்.
"அதை அறிந்ததும் நான் பதற்றம் அடையாமல் அவரைச் சந்திக்க விரும்பினேன். எனது அழைப்பை ஏற்று என்னைச் சந்தித்தார். அவரது கோபத்தின் ஆயுள் அவ்வளவுதான். கோபத்தால் எதுவும் நிகழாது. அதனால் ஏற்படும் இழப்புகள்தான் அதிகம்," என்றார் ஐஸ்வர்யா.
இவ்வாறு அறிவுரை கூறும் தாமும்கூட வாழ்க்கையில் பலமுறை கோபப்பட்டிருப்பதாகவும் அதனால் பலவற்றை இழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இனிமேலும் அத்தகைய போக்குடன் செயல்படத் தாம் விரும்பவில்லை என்று ஐஸ்வர்யா கூறினார்.
"கதாநாயகர்களும் நாயகிகளும் உச்சநிலை நட்சத்திரமாக உருவெடுப்பதற்கு இயக்குநர்கள்தான் கைகொடுக்கிறார்கள். அவர்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது இயக்குநர்கள்தான்.
"ஒரு கதாநாயகியை ரசிகர்கள் எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் அல்லது எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் அவர்கள்தான். இந்த 'சொப்பன சுந்தரி' படத்தை நான் முன்பே முழுமையாகப் பார்த்துவிட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்ததை மறக்க இயலாது.
"ஆனால் இந்தப் புதிய படத்தில் முற்றிலும் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால், பிறரைச் சிரிக்க வைப்பதுதான். ஒருவரை கண்ணீர் சிந்த வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ரசிகர்களை ஒருவர் தனது நடிப்பால் சிரிக்க வைத்துவிட்டால், அவரைவிட சிறந்த நடிகர் வேறு யாரும் இருக்க முடியாது. இதை உணர்ந்து இந்தப் படத்தில் எனக்கான கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்க முயற்சி செய்துள்ளேன்," என்றார் ஐஸ்வர்யா.
'லாக்கப்' படத்தைத் தொடர்ந்து 'சொப்பன சுந்தரி' படத்தை இயக்கி உள்ளார் சார்லஸ். லட்சுமி பிரியா, சந்திரமௌலி, தீபா சங்கர், கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பை இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டார்.
'சொப்பன சுந்தரி' படத்தை வெறும் நகைச்சுவை விருந்தளிக்கும் படைப்பாக மட்டும் பார்க்க வேண்டாம் என்றும் நல்லதொரு குடும்பப் படமாகவும் இது உருவாகி உள்ளது என்றும் ஐஸ்வர்யா குறிப்பிட்டார்.
"இத்தகைய தரமான படைப்பைத் தரக்கூடிய திறமையுள்ள சார்லஸ் அடுத்து உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை வைத்தும் படம் இயக்கும் அளவுக்கு உயர வேண்டும். எனக்கு ரஜினி சாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான, அழகான உடல்மொழிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தக் காட்சிகளை ரசிகர்கள் மிகவும் ரசிப்பர் என எதிர்பார்க்கிறேன்.
"நான் கதையின் நாயகியாக நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இயக்குநர்கள்தான் எனது பலம் என்பேன். 'கனா' படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, 'க/பெ ரணசிங்கம்' படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, இப்போது 'சொப்பன சுந்தரி' படத்தில் நடிக்க வைத்துள்ள சார்லஸ் ஆகிய மூவரும் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமானவர்கள். என் திறமையை நம்பி வாய்ப்பு அளித்தவர்கள்," என்று ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் தெரிவித்தார்.

