திரைத் துளி­கள்

2 mins read

 சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தை ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களை இயக்கியவர். 'பத்து தல' படத்தில் சிம்புவுக்கு இணையாக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கௌதம் கார்த்திக். முதல் முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியா பவானி சங்கர். கலையரசன், இயக்குநர் கௌதம் மேனன் ஆகிய இருவரும் வித்தியாசமான வேடங்களையும் ஏற்றுள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஒபலி என்.கிருஷ்ணா. 'பத்து தல' திரைப்படம் எதிர்வரும் 30ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

 இந்தியில் 'தாபா கார்டல்' என்ற பெயரில் உருவாகும் இணையத் தொடரில் நடிக்கிறார் ஜோதிகா. இது ஐந்து மொழிகளில் தயாராகும் இணையத் தொடராகும்.

தற்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'காதல்: தி கோர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள ஜோதிகா, இந்தியில் 'ஸ்ரீ' என்ற பெயரில் தயாராகும் படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார்.

இதற்காக மும்பையில் தங்கி உள்ளாராம். இந்நிலையில், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகும் 'தாபா கார்டல்' இணையத் தொடரில் வித்தியாசமான கதாபாத்திரத்தை அவர் ஏற்றுள்ளதாகத் தகவல். ஐந்து குடும்பப் பெண்களின் வாழ்க்கையை விவரிக்கும் தொடராக இது உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாம்.

 திருமணத்துக்குப் பிறகும் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றனவாம். அண்மைய பேட்டியில் இது குறித்து அவரே குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காஜல் இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'கோஸ்டி' படம் வரும் 17ஆம் தேதி வெளியீடு காண்கிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'ஜாக்பாட்' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் 'கோஸ்டி' படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இரட்டை வேடங்களில் அசத்தலாக நடித்துள்ளாராம் காஜல்.

 நடிகை மீனா திரை உலகில் அறிமுகமாகி, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதையடுத்து, திரையுலகத்தி னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பின்னர் கதாநாயகியாக வும் நடிக்கத் தொடங்கினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பலருடன் நடித்தி ருக்கிறார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் முத்திரை பதித்தவர் மீனா. இந்நிலையில், திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீனாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ரஜினி உள்ளிட்டோர் அவரை வாழ்த்தினர்.