சினிமா என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்பவர்கள் உண்டு. ஒரு முறை அதற்குள் நுழைந்தவர்கள் மீண்டும் வெளியில் போவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்த ஏவிஎம் நிறுவனம், சில தயாரிப்பாளர்கள் ஒரு சில தோல்விகளால் சினிமாவே வேண்டாமென ஒதுங்கிய வரலாறும் உண்டு.
நேற்று முன்தினம் வெளியான தயாரிப்பாளர் விஏ துரையின் காணொளி திரையுலகத்தில் மட்டுமல்ல சினிமா ரசிகர்
களிடமும் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் விஏ துரை தயாரித்த 'பிதாமகன்' படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதற்காக அவர் பல பஞ்சாயத்துகளைச் சந்திக்க நேர்ந்தது.
அப்படி ஒரு முறை பஞ்சாயத்திற்காக அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்தை சந்தித்தபோது அவர் சொல்லி, துரை தயாரித்த படம்தான் 'கஜேந்திரா'. அந்தப் படமும் பெரும் தோல்வியைத் தழுவியது.
அந்த இரண்டு படங்களின் நஷ்டங்களிலிருந்து துரையால் மீள முடியவில்லையாம். 'பிதாமகன்' படத்தின் போதே இயக்குநர் பாலாவிடம் அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்க முன்பணம் கொடுத்திருந்தாராம்.
சில மாதங்களுக்கு முன்பு அந்த முன்பணத்தைக் கேட்டு பாலா வீட்டிற்குச் சென்றபோது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சினிமாவில் வாங்கிய முன்பணங்களைத் திருப்பித் தரும் பழக்கமெல்லாம் பலருக்கும் இல்லை என்கிறார்கள்.
இந்நிலையில் தனது குடும்பத்தினராலும் ஒதுக்கப்பட்ட விஏ துரை உடல்
நலம் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.
மருத்துவ செலவுகளுக்குக்கூடப் பணம் இல்லாததால்தான் அவர் பேசிய காணொளியை அவரது நண்பர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதைப் பார்த்த 'பிதாமகன்' படத்தில் நடித்த சூர்யா, துரையின் மருத்துவமனை செலவுக்கான தொகையை ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் சில தயாரிப்பாளர்கள், நடிகர் கருணாஸ் உள்ளிட்ட சிலரும் உதவி செய்ய முன் வந்துள்ளார்கள். திரையுலகத்திலிருந்து இன்னும் பலரும் உதவி செய்யத் தயாராக உள்ளார்களாம்.
தங்களது எதிர்காலத்திற்காக ஒரு சிறு தொகையைக்கூட சேர்த்து வைக்காத நிலையில் சில தயாரிப்பாளர்கள் இருப்பது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சினிமா நடிகர்கள் பலரை பணக்காரர்களை உருவாக்குகிறது. அதே சமயம் பணக்காரர்களாக இருந்த தயாரிப்பாளர்களை ஏழைகளாகவும் ஆக்கிவிடுகிறது.
தயாரிப்பாளர் வி.துரை தயாரித்த 'பிதாமகன்' படத்தில் சூர்யா, விக்ரம், சங்கீதா.

