திரைத்துளிகள்

திரைத்துளிகள்

2 mins read
4585059c-317b-491d-a8bd-f7491d1488fc
-
multi-img1 of 2

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார். அவரைப்போல இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் 'ஜப்பான்' படத்தில் நடிகர் கார்த்தியும் இடைவிடாது நடித்து வருகிறார். இந்நிலையில் 'மாவீரன்' படமும் 'ஜப்பான்' படமும் ஜுன் 29 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு இவர்கள் நடித்த 'தம்பி' - 'ஹீரோ' படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின. அதுபோல் தீபாவளிக்கு 'சர்தார்' - 'பிரின்ஸ்' படங்கள் மோதின. இதில் 'சர்தார்' வெற்றி பெற்றது. 'பிரின்ஸ்' தோல்வி அடைந்தது. இப்போது 'மாவீரன்' - 'ஜப்பான்' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கார்த்தியும் சிவகார்த்திகேயனும் மோதுகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், "கடவுள் இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நமது உடலில் உள்ள இதயம் 'லப்டப் லப்டப்' என்று நாம் பிறந்ததிலிருந்து சுமார் 70, 80 ஆண்டுகள் வரை அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த விஞ்ஞானியாவது இப்படி ஒரு இயந்திரத்தைச் செய்ய முடியுமா. அதுபோல் நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு துளியையாவது விஞ்ஞானிகளால் செய்ய முடியுமா? இதையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறுவதைப் பார்க்கும்போது எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை," என்று கூறினார். இவர் பேசிய இந்த காணொளியை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழில் வரலெட்சுமி நடிப்பில் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் 'கொன்றால் பாவம்' என்ற படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநரான தயாள் பத்மநாபன் கன்னடத்தில் பல படங்களை இயக்கி இருக்கிறார். கன்னடத்திலும் தெலுங்கிலும் வெற்றி பெற்ற இதே படத்தை தமிழிழும் இயக்கியுள்ளார். படத்தின் கதையும் கதையை நகர்த்திச் சென்ற விதமும் ஓரளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் 'பகலும் பாதிராவும்' என்ற படம் மார்ச் 3ஆம் தேதி வெளியானது. குஞ்சாகோ போபன், ரஜிஷா விஜயன், குரு சோமசுந்தரம், ஜெய்பீம் புகழ் நடிகை சீதா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களின் கதையும் ஒன்றே. கவனித்துப் பார்க்கும்போது இந்த இரண்டு படங்களின் கதையையும் எழுதியவர் தயாள் பத்மநாபன் என குறிப்பிடப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு 95வது ஆஸ்கர் விழா அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு குறும்படங்களும் தேர்வாகியுள்ளன. இவற்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து சாதனை படைக்குமா என்ற கேள்விக்குறியுடன் காத்திருக்கிறது இந்திய திரையுலகம்.