தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், அனுஷ்கா இந்தியில் நடிக்கவில்லை என்பதில் அவரது ரசிகர்களுக்கு இன்றளவும் வருத்தம் உள்ளது.
இந்நிலையில், சம்பளப் பிரச்சினை காரணமாகவே 'சிங்கம்' படத்தின் இந்தி மறுபதிப்பில் நடிக்க முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியில் நடிப்பதற்கான புது வாய்ப்புகள் தேடி வரும் என்று இப்போதும் நம்பிக்கையோடு காத்திருப்பதாகச் சொல்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அடுத்து அவர் இந்தியில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேடிவந்த வாய்ப்புகளை அவர் நிராகரித்ததாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், அப்போது என்ன நடந்தது என்பது குறித்து இப்போது விளக்கமளித்துள்ளார்.
"சூர்யாவும் நானும் தமிழில் நடித்த 'சிங்கம்' படத்தை அதே பெயரில் இந்தியில் மறுபதிப்பு செய்தனர். அஜய்தேவ்கன் நாயகனாக நடித்தார். அதில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு முன்பு என்னைத்தான் அணுகினர். எனினும் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினை காரணமாக அந்தப் படத்தில் நான் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு இந்தியில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை," என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

