அண்மைக்காலமாக ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. இந்நிலையில், லிங்க பைரவி தேவி கோவிலில் அம்மன் முன்னால் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
"வாழ்க்கையில் நம்பிக்கைதான் அனைத்தையும்விட உயர்வானது. இதற்கு அதீதமான சக்திகள் எதுவும் தேவையில்லை. விசுவாசம்தான் உங்களை அமைதியாக வைத்திருக்கும். நம்பிக்கைதான் உங்கள் குரு. நம்பிக்கைதான் உங்களை மனித நிலைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும்," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
பைரவி தேவி அனைவருக்கும் உரிய சக்தியைக் கொடுப்பார் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது இந்தப் பதிவை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
திரைத்துறையில் ஆண்களும் பெண்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்கிறார் பிரியங்கா சோப்ரா.
தனது 22 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான சம்பளத்தை தாம் பெற்றிருப்பதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 'சிட்டாடல்' என்ற இணையத் தொடரில் நடித்து இருக்கிறார் பிரியங்கா. இதற்காக அவர் எதிர்பார்த்த பெருந்தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
"இதுவரை எழுபது திரைப்படங்களிலும் இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளேன். எனது திரை வாழ்க்கையில் முதன் முறையாக 'சிட்டாடல்' தொடருக்குத்தான் உடன் நடித்த நாயகனுக்கு இணையான ஊதியத்தைப் பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
"இதே உழைப்பைத்தான் மற்ற படங்களுக்கும் கொடுத்தேன். ஆனால் குறைவான ஊதியமே கிடைத்தது," என்கிறார் பிரியங்கா சோப்ரா.
'விடுதலை' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை 25 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படம், இரண்டு பாகங்களாக வெளியீடு காண உள்ளது.
அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து, லட்சக்கணக்கானோர் அத்தொகுப்பைப் பார்த்து சிறப்பாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். இதனால் படத்தின் கதாநாயகன் சூரி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் நாயகனாக நடிக்கும் முதல் படம் 'விடுதலை' ஆகும்.
நகைச்சுவை சாதனையாளர் விவேக்கின் மறைவு திரையுலகத்துக்குப் பெரும் இழப்பு என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். தமது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

