'யாத்திசை' என்ற வித்தியாசமான தலைப்புடன் தயாராகி வரும் புதுப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் பிரம்மாண்ட போர்க் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுமுகங்கள் ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.
சங்கத்தமிழர் வாழ்வியலையும் போர்முறைகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் சரித்திரப் படமாக 'யாத்திசை' தயாராகிறது என்று அவர் கூறியுள்ளார்.
"கடந்த ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீரன் பாண்டியன் என்ற மன்னனுக்கும் 'எயினர்'கள் எனப்படும் பழங்குடி கூட்டத்துக்கும் இடையே நடந்த போராட்டத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
'நவகண்டம்' என்று அழைக்கப்பட்ட தன்னைத்தானே பலி கொள்ளும் முறை, கொற்றவை பலி, தேவரடியாரின் வாழ்க்கை முறை, சிற்றரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே இருந்த திருமணம் உள்ளிட்ட உறவு முறைகள் ஆகியவை குறித்து இந்தப் படம் விவரிக்கும்.
"ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு அவற்றைப் பற்றிய காட்சிகள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. போர்க் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகிறது. தயாரிப்பாளர் தாராளமாகச் செலவழித்துள் ளார்," என்கிறார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.
