தென்னிந்திய நடிகைகள் இந்திப்பட வாய்ப்புகளுக்காக ஏக்கத்துடன் காத்துக்கிடந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது, இந்தித் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தென்னிந்திய நடிகைகளின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கிறார்கள்.
அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம்.
ஒரு காலத்தில் இந்திப் படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகைகளுக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது. அவர்களும் இந்தியில் நடிப்பதை பெருமைக்குரிய விஷயமாகக் கருதினர்.
அதன் பின்னர் கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தமிழ்ப் படங்களில் நடிப்பதைப் பெருமையாகக் கருதினர்.
இப்போது தென்னிந்திய நடிகைகளுக்கு இந்தித் திரைஉலகத்தைப் போன்று அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. தென்னிந்திய மொழிப் படங்களுக்கும் வடஇந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
"இதன் காரணமாக இந்திப் பட உலகை தென்னிந்திய நடிகைகள் ஆளும் நிலைமை உருவாகி இருக்கிறது. தமிழ்த் திரையுலகத்தினர் வடஇந்தியாவில் இருந்து நாயகிகளை இறக்குமதி செய்த நிலை மாறி, இப்போது நயன்தாரா, ஷ்ருதிஹாசன், ராஷ்மிகா, சமந்தா, அமலாபால் உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் இந்திப் பட உலகை கலக்குகிறார்கள்.
"குறிப்பாக 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்', 'காந்தாரா', 'பொன்னியின் செல்வன்', 'புஷ்பா', 'கேஜிஎஃப்' உள்ளிட்ட தென்னிந்தியப் படங்கள் நாடு முழுவதும் பெரும் வசூலைப் பெற்றுள்ளன. அதனால் அப்படங்களில் நடித்த நாயகிகளுக்கு நாடு தழுவிய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது," என்கின்றனர் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
நயன்தாரா அண்மைக்காலமாக தன் ரசிகர்களுக்கு வசூல் ரீதியில் வெற்றிப் படங்களைக் கொடுக்கவில்லை. எனினும் அவரது சந்தை மதிப்பு குறையவில்லை. விஜயசாந்திக்குப் பிறகு 'பெண் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை தன் வசம் கொண்டுள்ளார் நயன்தாரா.
இப்போது தென்னிந்தியாவில் அவர்தான் முதல் நிலை நடிகை என்கிறார்கள். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' என்ற இந்திப் படத்தில் நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படம் வெளியான பிறகு அவரது மதிப்பு இந்தித் திரையுலகிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்திய ஊடகங்கள் நயன்தாராவைப் பற்றிய ஏதாவது ஒரு செய்தியை தினந்தோறும் வெளியிட்டு வருகின்றனவாம்.
இரண்டு கன்னடப் படங்களில் நடித்த பிறகு தெலுங்கில் அறிமுகமானவர் ராஷ்மிகா. இப்போது தெலுங்கு தேசத்தில் சக்கைப்போடு போட்டு வருபவர், தமிழிலும் அசத்தி வருகிறார். இந்நிலையில், 'புஷ்பா' படத்தின் மூலம் வடஇந்திய ரசிகர்களும் ராஷ்மிகாவை கவனிக்கத் தொடங்கி உள்ளனர். தற்போது இரண்டு இந்திப் படங்களில் ஒருசேர நடித்துக்கொண்டிருப்பவர், மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
'தி ஃபேமிலி மேன்' இந்தி இணையத்தொடர் சமந்தாவின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். அத்தொடருக்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களால் இந்தியில் தனக்கென ஓரிடத்தை சமந்தா பிடித்துவிட்டதாக பலரும் கூறுகின்றனர்.
உடல்நலப் பாதிப்பால் சற்றே முடங்கி உள்ள போதிலும், நல்ல வாய்ப்புகள் பல அவரைத் தேடி வருகின்றனவாம். இந்தி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வரும் அமலா பால், 'போலா' படம் மூலம் இந்தி ரசிகர்களைக் கவர உள்ளார். "சம்பளம் குறைவாக இருந்தாலும் கவலைஇல்லை. நல்ல கதைக்களம் இருந்தால் போதும்," என்பதுதான் இந்தியில் நடிக்க அமலா விதிக்கும் முக்கிய நிபந்தனையாம். இதனால் கவரப்பட்ட இளம் இயக்குநர் ஒருவர் அவரை அணுகிச் சொன்ன வித்தியாசமான கதை பிடித்துப் போகவே, அவர் கேட்டதைவிட அதிக நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் அமலா.
மும்பையில் இருந்து வந்து தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து தமிழ்நாட்டின் மருமகளாகிப் போன ஜோதிகாவும் இப்போது இந்தியில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
ஷ்ருதிஹாசன் உள்ளிட்ட மேலும் சில இளம் நாயகிகளையும் இந்தி திரையுலகத்தினர் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
"அனைவருக்குமே எதிர்பார்த்ததைவிட அதிக தொகை ஊதியமாகக் கிடைக்கிறது. எனினும் முன்புபோல் ஆண்டுக்கணக்கில் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என இந்தித் தயாரிப்பாளர்கள் நிபந்தனை விதிப்பதில்லை என்பது நல்ல முன்னேற்றம்.
"இந்தி நாயகிகள் நிறைய செலவுகளை ஏற்படுத்துவார்கள் எனில் தென்னிந்திய நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. இதுவும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க முக்கியக் காரணம்," என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
, :
தமிழகத்

