விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' ஆகிய இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியீடு கண்டன.
விஜய் தனது அடுத்த படத்தை முடிவு செய்து 'லியோ' படப்பிடிப்பை முடிக்க உள்ளார். ஆனால் அஜித் தரப்பில் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த காலதாமதத்துக்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார்.
இதையடுத்து இயக்குநர் மகிழ் திருமேனி ஒப்பந்தமானார். அவர் கூறிய கதையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு அஜித் கூறியதாகவும் அதற்கான பணியில் மகிழ்திருமேனி ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளரையும் அழைத்த அஜித், திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குநருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டாராம்.
"சில சமயங்களில் இயக்குநர்கள் பிரமாண்ட காட்சிகளை மனதில் கற்பனை செய்து திரைக்கதை அமைப்பது வழக்கம். ஆனால் படப்பிடிப்புக்குக் கிளம்பும்போது, அத்தகைய காட்சிகளை படமாக்க கூடுதல் அவகாசம் தேவைப்படும் என ஒளிப்பதிவாளர்கள் கூறுவதுண்டு. இதனால் பட வேலைகள் தாமதப்படும்.
"அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என அஜித் விரும்புகிறார். அதனால்தான் கதை, திரைக்கதையை இறுதி செய்யும் முன்பே, இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் இணைந்து செயல்படுவது நல்லது என அவர் நினைக்கிறார். அதனால்தான் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை," என்கிறார்கள் விவரம் அறிந்தவர்.
அநேகமாக 'லியோ' படப் பிடிப்பு முடிவடையும் வேளையில், அஜித்தின் புதுப்பட அறிவிப்பு வெளியாகக்கூடும்.

