மலையாள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ரெஜிஷா மிதிலா இயக்கும் தமிழ்ப் படம் 'யானை முகத்தான்'. இதில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சில படங்களை இயக்கித் தயாரித்துள்ள அனுபவம் கொண்டவர் ரெஜிஷா.
இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரெஜிஷா, தமது படத்தின் கதை நாயகனாக யோகி பாபுவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை அளித்தார்.
"கொரோனா பொது முடக்கத்தின்போது வீட்டில் சும்மா இருக்க முடியாமல் ஏராளமான படங்களைப் பார்த்தேன். அவற்றுள் யோகி பாபு நடித்துள்ள 'மண்டேலா' படமும் ஒன்று. "அண்மைக்காலத்தில் என்னை அதிகம் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று.
"உடனே யோகி பாபுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்தப் படமும் அவரது நடிப்பும் மிகவும் பிடித்திருந்தது என்று பாராட்டினேன். பிறகு நான் உருவாக்கி வைத்திருந்த ஒரு கதைக்கருவை மட்டும் அவருடன் பகிர்ந்துகொண்டேன். அதைக் கேட்டதும் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.
"தாமே அந்தப் படத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். அதைக் கேட்டதும் கடவுளே நேரில் வந்து வரம் தந்ததுபோன்று இருந்தது. காரணம், தமிழில் நல்ல படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன்.
"யோகியைப் போன்ற முன்னணி நடிகர் நான் கேட்காமலேயே கால்ஷீட் ஒதுக்க முன்வருவது பெரிய அதிசயம்தான்," என பூரித்துப்போகிறார் ரெஜிஷா.
'யானைமுகத்தான்' கற்பனையும் யதார்த்தமும் சரிவிகிதத்தில் உள்ள குடும்பப் படமாக உருவாகிறதாம். கடவுள் திடீரென நேரில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை திரைக்கதை மிக சுவாரசியமாக விளக்குமாம்.
"ஒவ்வொருவருக்கும் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்ற பார்வை இருக்கும். இதில் கடவுள் இப்படியும் இருப்பார் என்பதைச் சொல்கிறேன். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் தொடர்புதான் இந்தப்படம்.
"இதை வழக்கமான பாணியில் சொல்லாமல் எனக்குத் தெரிந்த அளவில் சற்று வித்தியாசமான கோணத்தில் கூறியுள்ளேன். ஒரு சாமானியனின் வாழ்க்கையில் கடவுள் வருகிறார். அதற்கான காரணமும் கடவுள் வருவதற்கான நோக்கமும் புதிதாக இருக்கும். அது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரசியத்தைத் தரும். யோகி பாபு திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாக அமையும். கூடவே சிந்திக்கவும் வைக்கும்," என்கிறார் ரெஜிஷா.

