திரையுலகில் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போதுதான் தனி நாயகியாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால்.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான படம் 'கோஷ்டி'.
இதையடுத்து 'கருங்காப்பியம்', 'உமா' என வரிசையாகப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அனைத்தையும்விட முக்கியமாக 'இந்தியன் 2' படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்.
"நான் திரைத்துறையில் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை நினைத்துப் பார்த்தால் எனக்கே வியப்பாக உள்ளது. இதை வெற்றி எனக் கருதுகிறீர்கள் எனில், அதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. எனது குடும்பம், நெருக்கமான நண்பர்கள், திரையுலகத்தினர் எனப் பலரும் பங்களித்துள்ளனர்.
"திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டேன். இப்போது எனது கணவர் பக்கபலமாக இருக்கிறார். ஆறு மாதக் கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு நடிக்க வந்திருக்கிறேன்.
"என் தாயாரின் ஆதரவு இன்றி என்னால் தொழிலைக் கவனிக்க இயலாது. எனவே எனது ஒவ்வொரு வெற்றியிலும் பல நல்ல உள்ளங்கள் துணை நிற்கின்றன.
"மேலும் ரசிகர்களின் அன்பைக் குறிப்பிட வேண்டும். அதுதான் இத்தனை ஆண்டுகளாக என்னை நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல தூண்டுகோலாக உள்ளது," என்கிறார் காஜல் அகர்வால்.
'லைவ் டெலிகாஸ்ட்', 'கோஷ்டி' என புதுப்படங்கள், இணையத்தொடர்கள் பேய்க் கதைகளை மையமாக வைத்து உருவாகி உள்ளன. இவற்றில் காஜல் அகர்வால்தான் நாயகி.
"ஒரு ரகசியம் தெரியுமா? எனக்குப் பேய்க்கதைகள் என்றால் அறவே பிடிக்காது. பேய் என்று சொன்னாலே பயத்தில் அலறிவிடுவேன். திகில் படங்களைப் பார்க்கவே மாட்டேன்.
"ஆனால் பேய்க்கதைகளை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். அதனால் தொழில் என்று வந்த பின்னர் எனது தனிப்பட்ட பயம், நம்பிக்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, நடிக்கிறேன்.
"இயக்குநர் வெங்கட் பிரபு என்னை சந்தித்து 'லைவ் டெலிகாஸ்ட்' இணையத் தொடரில் நடிக்கக் கேட்டபோது, பயத்தை மீறி முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால் விமர்சன ரீதியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.
"அதேபோல் 'கோஷ்டி' படத்தில் திகில் கொஞ்சம் குறைவுதான். நகைச்சுவை தூக்கலாக இருக்கும். படம் முழுவதும் நிறைய நகைச்சுவைக் கலைஞர்கள் இடம்பெற்று இருந்ததால், அது நகைச்சுவைப் படமாகவே ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் என நம்புகிறேன்," என்று சொல்லும் காஜல், திருமணத்துக்குப் பிறகும் தமிழ் ரசிகர்கள் தன்னை முன்னணி கதாநாயகியாக அங்கீகரித்துள்ளதாகச் சொல்கிறார்.
ரசிகர்களின் இந்த அன்புக்குக் கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுபவர், தனி நாயகியாக நடிக்கத் தொடங்கியதும் மனநிறைவு அதிகரித்துள்ளது என்கிறார்.
"முன்பெல்லாம் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்த நீங்கள், இப்போது இரண்டாம் நிலையில் உள்ளவர்களுடன் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். முன்பு கதாநாயகர்களை நம்பி உருவாக்கப்பட்ட கதையில் நானும் இருந்தேன், அவ்வளவுதான்.
"ஆனால் இப்போது என்னை மட்டுமே முழுமையாக நம்பி உருவாகும் படங்களில் நடிக்கிறேன். இப்போதுதான் எனது உண்மையான பலம் என்னவென்று புரிகிறது. இதுவரை பெற்ற அனுபவங்களைக் கொண்டு தனி நாயகியாக முத்திரை பதிக்க முயன்று வருகிறேன்," என்கிறார் காஜல் அகர்வால்.
'இந்தியன் 2' உள்ளிட்ட பெரிய படங்களில் நடிக்க தம்மை ஒப்பந்தம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இன்னும்கூட தனக்கு வரவேற்பு உள்ளது எனில் அதற்கு ரசிகர்களின் ஆதரவுதான் காரணம் என்கிறார்.
ரசிகர்கள் என்றும் தன்னை நினைவில் வைத்திருப்பதற்கு ஏற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதே இப்போது தனது ஒரே இலக்கு என்றும் காஜல் அகர்வால் கூறுகிறார்.
, :
தமிழகத்


