மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிந்திருந்த 'காசேதான் கடவுளடா' படத்தின் காசு பிரச்சினைத் தீர்ந்து படம் வெளியாக இருக்கிறது. படம் எடுப்பதற்கு கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்காததால் படத்தை வெளியிட முடியாமல் வழக்குப் பதிவு செய்து படத்தை நிறுத்தி வைத்திருந்தார் ஒரு தொழில் அதிபர். இந்நிலையில் இந்தப் படத்திற்கான அனைத்துப் பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டு படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 1972ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் நடித்த 'காசேதான் கடவுளடா' படத்தின் மறுபதிப்புத்தான் இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் வெளிவந்த 'வீட்டுல விசேஷம்', 'ரன் பேபி ரன்' இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது 'சொர்க்கவாசல்' படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது செல்வராகவனும் இணைந்து இருக்கிறார். அதோடு 'பகாசூரன்' படத்தில் நடித்தது போன்று இந்தப் படத்திலும் செல்வராகவன் அழுத்தமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
மலையாள நடிகர் பஹத் பாசில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மலையாளத்தில் 'மாலிக்', தெலுங்கில் 'புஷ்பா', தமிழில் 'விக்ரம்' என தொடர்ந்து வில்லத்தனமான கதை அம்சம் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது நகைச்சுவை முகத்தை ரசிகர்களுக்கு காட்டத் தயாராகி வருகிறார். 'பாச்சுவும் அற்புத விளக்கும்' என்ற படத்தில் நூறு விழுக்காடு நகைச்சுவையுடன் பஹத் பாசில் நடித்திருப்பதாகக் கூறினார் படத்தின் இயக்குநர்.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த கன்னடப் படம் 'காந்தாரா'. அப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியாகியது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. கடலோரக் கர்நாடகாவில் பேசப்படும் துளு மொழியிலும் இப்படம் மறுபதிப்பு செய்யப்பட்டு திரையரங்கில் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தை 'நெட்பிளிக்ஸ் ஓடிடி' தளம் ஆங்கிலத்திலும் மறுபதிப்பு செய்து வெளியிட்டது. தற்பொழுது இப்படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மறுபதிப்பு செய்து வெளியிட இருக்கிறார்கள். அதுபற்றிய சுவரொட்டியுடன், இத்தாலி மொழியில், "அனைத்துலக ரசிகர்களின் கோரிக்கைக்கு நன்றி. 'காந்தாரா' படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மறுபதிப்பு செய்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என ரிஷப் ஷெட்டி பதிவிட்டுள்ளார். ஒரு கன்னடப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், துளு, ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மறுபதிப்பு செய்யப்படுவது இந்திய திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

