1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு முதல் நாளும் சுதந்திரத்துக்கு அடுத்த நாளும் ஒரு கிராமத்தில் என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம்.
"இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சுமார் முந்நூறு ஆண்டுகாலம் பல்வேறுவிதமாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அக்காலகட்டத்தில் என்னவெல்லாம் நடந்தன என்பதை மூன்று நாள்களில் விவரித்துள்ளோம்.
"மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புளியங்குடி என்ற கிராமத்தில் நடக்கும் கதை இது. ஆனால், உண்மைக் கதை கிடையாது. இப்படி நடந்திருக்கலாம் என்று சொல்ல வரும் கற்பனைக் கதை.
"இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளாகிவிட்டன. பிரிட்டிஷ்காரர்களும் இங்கு இல்லை. ஆனால், அவர்களுடைய சிந்தனையின் தாக்கம் அப்போது மட்டுமல்ல, இன்றளவும் தொடர்வது வியப்பளிக்கிறது.
"ஆங்கிலேயர்கள் குறித்து காந்தி கருத்து தெரிவித்தபோது, 'நமக்கு உண்மையான எதிரி பிரிட்டிஷ்காரர்களின் சிந்தனைதான்' என்றார். உதாரணத்துக்கு, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் இளையர்கள் சாப்பிடச் செல்லும் இடத்திலும்கூட அதில் கவனம் செலுத்தாமல் 'நாளை மேலாளர் நம்மிடம் ஒப்படைத்த பணி குறி்த்து விசாரிப்பாரே' என்று அதிகாரியை நினைத்து பயத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்.
"சம்பந்தப்பட்ட அதிகாரி அருகே இல்லையென்றாலும் அந்த இடத்தில் ஒருவித பயம் பரவுகிறது என்றால் அதை ஏற்படுத்துவதுதான் பிரிட்டிஷ்காரர்களின் சிந்தனை என்று சொல்கிறேன்.
"அது எந்த மாதிரியான பயம், அந்தப் பயத்தில் இருந்து கிராம மக்கள் எப்படி வெளியே வந்தார்கள், அவர்கள் நினைத்தபடி உண்மையான சுதந்திரம் கிடைத்ததா, ஆகஸ்ட் 16ஆம் தேதி அந்த கிராமத்தில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்கிறோம்," என்கிறார் இயக்குநர் பொன்.குமார்.
இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பு அண்மையில் வெளியானது. அதில் நாயகன் கௌதம் கார்த்திக் ஆவேசமாகப் பொங்குகிறார்.
"கெளதம் கார்த்திக் இந்தப் படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பு வேறு சில நாயகர்களைத்தான் அணுகினேன். அதுதான் உண்மை. எனினும் சில கால தாமதங்கள் காரணமாக அவர்கள் ஒப்பந்தமாகவில்லை. அதன் பிறகுதான் கௌதமை அணுகினேன்.
"இந்தக் கதைக்கு கதாநாயகன் தேவையில்லை. கதைக்கு ஏற்ற மாதிரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவர் தேவைப்பட்டார். அதற்கு கௌதம் பொருத்தமாக இருந்தார். எனினும் தனது கதாபாத்திரத்தை கதை நாயகனாக அவnt மெருகேற்றி உள்ளார்.
"கௌதம் கார்த்திக் பிரமாதமாக நடிப்பார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நடிப்பை உடன் நடிக்கும் நடிகர்களுக்கும் கடத்தும் அருமையான கலைஞர் அவர்.
"இந்தப் படத்தின் தொடக்கப் பணிகளில் இருந்து என்னுடன் இணைந்து பயணம் செய்ததுடன் பல வகையிலும் ஆதரவாக இருந்தார். அவரது இந்த ஈடுபாடு, என்னைப் பலவகையிலும் ஊக்கப்படுத்தியது. எனது படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது அவர்தான்," என்கிறார் பொன்.குமார்.
'1947 ஆகஸ்டு 16' படத்தில் ரேவதி என்ற புதுமுகத்தை நாயகியாக அறிமுகம் செய்கின்றனர். அடிப்படையில் சிறந்த பரதநாட்டியக் கலைஞராம். நடிக்கச் சம்மதமா என்று கேட்டபோது, 'இதுதான் எனது ஆசை' என்று சொல்லி, உடனே சம்மதித்துள்ளார்.
"கதைப்படி, ஊர் ஜமீன்தாரின் மகளாக வருகிறார். கோவில் சிற்பம் மாதிரி வலம் வரவேண்டிய கதாபாத்திரம். நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பதால் நேர்த்தியாக நடித்துள்ளார்.
"நடிகர் புகழை வித்தியாசமான பாத்திரத்தில் காண முடியும். அவரை ஒப்பந்தம் செய்த உடனேயே, அவரது சுருள் முடியை தலைக்குப் பின்னால் இழுத்துக்கட்டச் சொல்லிவிட்டேன்.
"வெறும் நகைச்சுவை பாத்திரமாக இல்லாமல், உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி நடித்துள்ளார்.
"மற்றவர்களும் சிறப்பாக ஒத்துழைத்தனர். படம் விரைவில் வெளியாகும்," என்கிறார் அறிமுக இயக் குநர் பொன்.குமார்.

