சமந்தா பல பிரச்சினைகளைத் தாண்டி தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு வந்திருக்கிறார். இவர் நடித்த 'யசோதா' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், அடுத்து இவரின் நடிப்பில் 'சாகுந்தலம்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவர் அணிந்திருந்த உடையின் எடை, நகையின் எடை ஆகியவற்றைப் பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார் சமந்தா.
தன்னுடைய 13 ஆண்டுகால திரை வாழ்க்கையைச் சிறப்பாக கடந்த சமந்தா, ரசிகர்களின் விருப்பமான நடிகைகளில் முக்கியமானவராக உள்ளார். தமிழிலும் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சமந்தா, 'தமிழ் பொண்ணு' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களது பிரிவுசெய்தி ஒட்டுமொத்த திரையுலகிலும் பேசு பொருளாக மாறியது.
பலரின் பேச்சை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், பாலிவுட் என இறக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமன்றி 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது திரை வாழ்க்கை உச்சத்தைத் தொட்டது.
இந்தச் சூழலில், அவருக்கு 'மையோசிடிஸ்' எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ரசிகர்கள் அனைவரும் அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைய, தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.
சமந்தா மீண்டும் நடிப்பில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார். அந்தவகையில் அவர் நடித்த 'யசோதா' படம் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
அதைப்போல 'சாகுந்தலம்' மற்றும் 'குஷி' ஆகிய படங்களிலும் சமந்தா நடித்திருக்கிறார். இதில் 'சாகுந்தலம்' படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி, சுவரொட்டிகள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அண்மையில் படத்தைப் பார்த்த சமந்தா, படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
படத்தில் உயர்ரக கற்கள் பதிக்கப்பட்ட 30 கிலோ எடைகொண்ட ஒரு புடவையை அணிந்து ஒரு வார காலம் நடித்ததாக குறிப்பிட்ட சமந்தா மேலும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும் அணிந்து நடித்ததை பெருமையாகக் கூறினார்.
அப்படி தங்க, வைர நகைகள் அணிந்து புராணக் கால வேடத்தில் சமந்தா நடித்துள்ள புகைப்படங்கள் தற்பொழுது வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா வுடன் 'குஷி' படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார் சமந்தா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவு அடையவுள்ள நிலையில், அடுத்ததாக பாலிவுட்டில் 4 படங்களில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 'தி பேமிலி மேன் 2' இணையத் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவின் அடுத்த இணையத் தொடரிலும் சமந்தா நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள சமந்தா, தன்னுடைய உடல்நலனை மிகுந்த கவனத்துடன் மீட்டெடுத்து வருகிறார்.
தொடர்ந்து தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அதன் காணொளிகளையும் புகைப்படங்களையும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
நோய் பாதிப்பில் அப்படியே முடங்கி போகாமல் மீண்டும் தன்னுடைய திரை வாழ்க்கை, உடல்நலன் என கவனம் செலுத்தி பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுந்த சமந்தா மற்றவர்களுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
சமந்தா, தேவ் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள புராணக் காதல் திரைப்படம் 'சாகுந்தலம்'. இந்தப் படத்தில் சமந்தா தோன்றும் ஒரு காட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து இருப்பார்.

