நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் வயது மூப்பு காரணமாக தனது 86வது வயதில் நேற்று அதிகாலை சிங்கப்பூர் நேரப்படி 5.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அண்மையில் போலி டாக்டர் பட்டம் கொடுத்த வகையில் பல பிரச்சினைகளை பலர் சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளையில், இசை அமைப்பாளரும் நடிகருமான 'ஹிப் ஆப்' ஆதி உண்மையாகவே முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். "இது படித்து வாங்கிய பட்டம்தான். இதற்காக ஐந்தரை ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறேன். அதனால்தான் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தேன். இனிமேல் என்னை 'டாக்டர் ஆதி' என்று தைரியமாக அழைக்கலாம்," என்று பதிவிட்டு இருக்கிறார் ஆதி.
"உகாதி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி, 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை எழுதும் பணி தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தது படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ஹோம்பாலே'. இயற்கையுடனான உறவை வெளிப்படுத்தும் மற்றொரு வசீகரிக்கும் கதையை உங்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்," என்று அது பதிவிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, "தற்போது வெளியாகியிருப்பது 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம்தான். கதைப்படி பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்," என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் தனது வசீகரக் குரலால் 10 ஆயிரம் திரைப்பட பாடல்களையும் 2,500 பக்திப் பாடல்களையும் பாடி இருக்கிறார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிறந்தார். அவர் கடந்த 2013ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி தனது 91வது வயதில் மரணம் அடைந்தார். நேற்று அவரது 100வது பிறந்தநாள். சென்னையில் அவர் வசித்து வந்த மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என்று பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு சென்னை மாநகராட்சி ஆய்வாளர் பரிந்துரை செய்துள்ளார். பரிந்துரையைப் பரிசீலித்து, மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என்று பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட இருக்கிறார்கள்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியானது. இதில் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ஆஸ்கர் விருது பெற்றது. அதனைக் கொண்டாடியது படக்குழு. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் ஒரு விழாவில் கலந்துகொண்ட அவரின் அடுத்த படத்தைப் பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்டபோது, கோபமடைந்த என்டிஆர் ஆவேசத்துடன், "இதைப்போல நீங்கள் என்னைக் கேட்டுத் தொந்தரவு செய்தால் நான் படங்களில் நடிப்பதையே நிறுத்தி விடுவேன்," என்று கூறினார். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே, "அப்படி படங்களில் நடிப்பதை நிறுத்தும் எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை," என்று கூறி மீண்டும் நிலைமையை சகஜமாக்கினார் ஜூனியர் என்டிஆர்.
ரஜினிகாந்த் நடித்துக்கொண்டு இருக்கும் படம் 'ஜெயிலர்'. இந்தப் படம் தீபாவளியன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்குள் முடிவடைந்துவிடும் என்றும் இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் படக்குழு அறிவித்து இருக்கிறது. அதனால் இப்படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்திற்கு முன்பாக ஆகஸ்ட் 11ல் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற காஷ்மீர் பகுதியில் படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் திடீரென இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஹோட்டலில் தங்கி இருந்தவர்கள் அவசரமாக வெளியேறினர். அவர்களில் நடிகர் கதிரும் காணப்பட்டார். இதிலிருந்து அவரும் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமானது.

