குப்பத்து இளையர்கள் என்றாலே பொறுப்பற்றவர்கள் என்று தமிழ் சினிமாவில் சித்திரிக்கப்படுவதை தம்மால் ஏற்க இயலாது என்கிறார் இயக்குநர் ரத்தினவேல்.
இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தனது படத்தில் குப்பத்தில் நடப்பது போன்ற பல காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காட்சிகள் இருக்காது என்று உத்தரவாதம் அளிக்கிறார்.
"சென்னையிலுள்ள ஒரு குப்பத்திற்கு அனாதைச் சிறுவர்கள் நான்கு பேர் வந்து சேர்கிறார்கள். பின்னர் அங்கு வசிக்கும் மக்கள் கூட்டத்தில் கலந்துவிடும் நால்வரும் பல வேலைகளைச் செய்து, அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் தேவைக்குப்போக மீதியை அந்தக் குப்பத்தில் உள்ள முதியவர்களின் மருத்துவச் செலவிற்கும் மாணவர்களுக்குப் படிப்புச் செலவுக்கும் கொடுத்து உதவுகின்றனர்.
"இந்நிலையில், தலைக்கவசம் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு தேடி வருகிறது. அதை நால்வரும் எப்படிச் சரியாகப் பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை," என்கிறார் ரத்தினவேல்.
'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' படத்தில் ஒரு காட்சி.

