திரைத்துளிகள்

திரைத்துளிகள்

2 mins read
57870cf7-d1ad-49f0-bb76-f0be9d9c515a
-
multi-img1 of 3

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது. அதை உண்மை என்று உணர்த்தும் வகையில் தம்பதிகள் நேற்று முன்தினம் நடந்த ஒரு விழாவிற்கு சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றனர். அப்போது தீபிகாவின் கையைப் பிடித்து நடக்க முயன்றார் ரன்வீர். ஆனால் தீபிகா அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் ரன்வீர் கோபமாக முன்னே சென்று விட்டார். இந்தக் காணொளி தற்பொழுது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'அயோத்தி'. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் கதைத் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். அத்துடன் பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பை கதாநாயகனாக வைத்து படம் இயக்க இருக்கிறார். ஜூன் முதல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

நடிகர் அஜித்தின் அப்பா சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்த நிலையில், அந்த செய்தியை அறிந்து நடிகர் விஜய் மிகவும் மனவேதனை அடைந்தார். இந்நிலையில், ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்குச் சென்ற விஜய் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளார். விஜய் - அஜித் சந்திப்பு சில காலமாகவே தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் அஜித்தை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

"எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதல் நபராக வந்து நிற்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்" என்று 'பத்து தல' படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது மேடையில் பேசினார் சிம்பு. பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படத்திற்கு இசையமைக்க 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவார். ஆனால், சிம்பு நடிக்கும் படம் என்பதால் 'பத்து தல' படத்திற்கு 8 கோடி ரூபாய் மட்டுமே வாங்கியதாக சொல்லப்படுகிறது. சிம்புவுக்காகவே இந்தப் படத்தில் ஒப்பந்தமான ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் வரவு செலவு பொறுத்து தனது சம்பளத்தையும் குறைத்துக் கொண்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

'"பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்தித்துக்கொள்ளும் காட்சி ஒன்று இருக்கும். அந்தக் காட்சி மிகவும் அருமையாக இருந்தது. மணிரத்னம் எடுத்த காட்சிகளிலேயே இந்தக் காட்சிதான் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது," என்று மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுகாசினி பூரிப்புடன் தெரிவித்துள்ளார். சுகாசினி பேசிய காணொளியை திரிஷா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.