எல்லாரும் நினைப்பதுபோல் சண்டைக் காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார் நடிகர் சிம்பு.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள 'பத்து தல' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பத்து தல' படத்தில் தாம் நடிப்பதற்கு நடிகர் கௌதம் கார்த்திக்தான் காரணம் என்றார்.
"கௌதமைப் பொறுத்தவரை அவர் கஷ்டப்பட்டாலும் அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.
"இவ்வாறு பிறருக்காக கஷ்டப்படுவதை ஜாலியாக எடுத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையில் தோற்பதற்கு வாய்ப்பே இல்லை.
"சில சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது, இவர் எதற்காக இப்படி எல்லாம் நடிக்கவேண்டும், பொருத்தமாகவே இல்லை என்று நினைக்கத் தோன்றும். ஆனால் சண்டைக் காட்சிகளில் நடிப்பவர்களுக்குத்தான் அது எவ்வளவு கடினமானது என்பது தெரியும்.
"ஒரு கதாநாயகனால் சண்டைக் காட்சிகளில் அனைவரையும் திருப்திப்படுத்திவிட இயலாது. ஆனால் கௌதம் கார்த்திக் இத்தகைய காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவரது நடிப்பை அருகில் இருந்து கவனித்து ரசித்தேன்.
"ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எப்போதுமே என் மீது தனிப்பாசம் உண்டு. அதன் காரணமாக இந்தப் படத்துக்கும் இனிமையான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கி உள்ளார்.
"கடந்த வாரம்தான் 'பத்து தல' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கான இசையைக் கொடுத்தார். பிறகு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். மறுநாள் இன்னொரு இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, லண்டனில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இசைப்பணியில் ஈடுபட்டார்.
"இதோ, இப்போது சென்னை திரும்பி 'பத்து தல' படத்தின் இசை வேலையில் ஈடுபட்டுள்ளார். அவரது உழைப்பைப் பார்த்து வியக்கிறேன்," என்றார் சிம்பு.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, இப்படத்தின் மின்னிலக்க வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் இப்படத்தின் செயற்கைக்கோள் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது. வரும் 30ஆம் தேதியன்று 'பத்து தல' உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இத்தகவல்கள் சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளன.