ஆஸ்கார் விருது பெறுவதற்காக 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் ரூ.80 கோடி வரை செலவிட்டதாக வெளியான தகவலை இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா மறுத்துள்ளார்.
ஆஸ்கார் விருது விழாவில் பங்கேற்கச் சென்று வந்த வகையில் ரூ.8.5 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுவதுபோல் ஆஸ்காருக்காக நாங்கள் செலவு செய்யவில்லை.
"இசையமைப்பாளர் கீரவாணி, காலபைரவா, ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ராகுல், பிரேம் ஆகியோருக்கு மட்டுமே விருது விழாவில் பங்கேற்க அதிகாரபூர்வ அழைப்பு கிடைத்தது.
"ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்கான விதிகளின்படி விருது வெல்பவர்கள் மட்டுமே அவருடன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து வரலாம்.
"அவர்களுக்கு மட்டுமே இலவச அனுமதி என்பதனால் எஞ்சியுள்ள படக்குழுவினருக்கு நுழைவுச் சீட்டு பெற்றுதான் பங்கேற்றோம். அந்த நுழைவுச்சீட்டின் விலை ரூ.57 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் ஆகும்.
"உண்மையில் நாங்கள் செலவு செய்தது வெறும் ரூ.8.5 கோடி தான். தொடக்கத்தில் ஐந்து கோடி ரூபாய்தான் செலவு செய்ய திட்டமிட்டு இருந்தோம்.
"ஆனால் அந்தச் செலவு ரூ.8.5 கோடியாக அதிகரித்துவிட்டது," என கார்த்திகேயா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விளக்கம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

