கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் கதாநாயகியாக நடித்துள்ள 'தசரா' படம் இன்று 'பான் இந்தியா' படமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, "தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பதற்கு முக்கிய காரணம் நயன்தாராதான்.
"அவரைத்தான் பாரட்ட வேண்டும். அவர்தான் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கத் தொடங்கினார்.
"'மாயா' படத்தில் அவர் நடித்த பிறகுதான் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் அந்தப்
படத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்ததால் சக நடிகைகளுக்கும் இதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன.
"அவர் நடித்த படம் வெற்றி அடைந்ததால் தயாரிப்பாளர்களும் பயமின்றி நடிகைகளை வைத்து படம் இயக்க முன்வந்தனர்.
"அவரால்தான் நடிகைகள் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினர். அவர்களில் நானும் ஒருத்தி" என்று நயன்தாராவை கீர்த்தி சுரேஷ் பாராட்டி பேசினார்.
கதாநாயகன் நானியுடன் கீர்த்தி நடிக்கும் இரண்டாவது படம் 'தசரா'. இதற்கு முன்பு 'நேனு லோக்கல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
'தசரா' படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக தெலுங்கானா பகுதியில் தெலுங்கு பேசுபவராக நடித்துள்ளார் கீர்த்தி.
படத்தில் நடிக்க ஒப்பந்தமான உடனேயே படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, கீர்த்தியை உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கூறியிருக் கிறார்.
அதற்காக 12 கிலோ வரை தன் உடல் எடையைக் குறைத்துள்ளார் கீர்த்தி. திடீரென அவர் ஒல்லியாக மாறியதன் காரணம் இதுதான். 'மகாநடி' படத்திற்குப் பிறகு கீர்த்திக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்ததாக 'வேதாளம்' படத்தின் தமிழ் மறுபதிப்பான 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி.

