தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'விடுதலை' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் பவானி ஸ்ரீ. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் சகோதரி.
எனினும் ஜிவியின் பெயரைப் பயன்படுத்தாமல் தனக்கென தனி வழியைத் தேர்வு செய்து நடைபோட்டு வருகிறார். இதுவரை தனது திறமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு திரையுலகில் வலம் வருவதாகச் சொல்கிறார் பவானி.
அண்மைய பேட்டி ஒன்றில் 'விடுதலை' பட அனுபவங்கள் குறித்து அவர் விலாவாரியாகப் பேசியுள்ளார். அதைக் கேட்போம்.
"வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. என் சகோதரர் அவரது இயக்கம் குறித்தும் அவரது படங்கள் உருவான விதம் குறித்து நிறைய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றை எல்லாம் கேட்கும்போது பிரமிப்பாக இருக்கும்.
"பின்னணிக் குரல் பதிவு முடிந்த பிறகுதான் எவ்வளவு பெரிய படைப்பில் நாமும் இருக்கிறோம் என்பதை என்னால் உணர முடிந்தது. இந்தப் படைப்பை உருவாக்க அனைவருமே சிரமப்பட்டோம். ஆனால் இது ஒரு வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது எனில் அதற்கு இயக்குநர் மட்டுமே முதன்மைக் காரணம் என்பேன்.
"வெற்றிமாறன் தனது கதாபாத்திரங்களைச் சித்திரிக்கும் விதம் அலாதியானது. ஒரு படம் தொடர்பான அவரது அணுகுமுறையை வெகுவாக ரசிப்பேன்," என்று சொல்லும் பவானி ஸ்ரீ, 'விடுதலை' படத்தில் நடித்தபோது பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகச் சொல்கிறார். பெரும்பாலான காட்சிகளை மலைப்பாங்கான பகுதிகளில் படமாக்கியதால் பல்வேறு சிரமங்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததாம்.
"நான் இதுவரை சிறிய அளவில் கூட மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டதில்லை. மேலும், பழங்குடியின மக்களின் வாழ்க்கைச் சூழல் குறித்தும் ஏதும் தெரியாது. இந்தப் படத்தின் கதை எந்தக் காலக்கட்டத்தில் நடக்கிறது என்பது குறித்து புரிதலும் தெளிவும் தொடக்கத்தில் இல்லை.
"ஆனால் வெற்றிமாறன் சார் எல்லாவற்றுக்கும் ஒரு திட்டம் வைத்திருப்பார். எனது கதாபாத்திரத்தை எப்படி வெளிப்படுத்துவது என நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, நேரடியாக படப்பிடிப்புக்கு வந்துவிடுங்கள், எல்லாவற்றையும் அங்கே பார்த்துக் கொள்ளலாம் என்று ஒற்றை வரியில் முடித்துவிட்டார்.
"படப்பிடிப்புக்குச் சென்றதும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை பார்த்து, சில நிமிடங்கள் பேசுமாறு கூறினார். இதன் மூலம் அம்மக்களின் வாழ்வியல் குறித்து ஓரளவு தெரிந்துகொண்டேன். அதன் பிறகு அம்மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு நடை ஆகியவற்றை கவனித்தேன்.
"வெற்றிமாறன் எதையும் முன்கூட்டியே தெரிவிக்கமாட்டார் என்ற விஷயம் எனக்கு இப்படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகே தெரியவந்தது. படப்பிடிப்புக்குச் சென்ற பிறகுதான் அது எந்த இடம் என்பது தெரியவரும். அங்கு அமர்ந்துதான் அவர் அன்றன்று எடுக்கப்படும் காட்சிகளுக்கான வசனங்களை முடிவு செய்தார். அதன் பிறகே காட்சியை நமக்கு விளக்கமாகச் சொல்லி, அதைப் படமாக்குவார்.
"இவ்வாறு எதையும் முன்கூட்டியே அவர் தெரிவிக்க மாட்டார் என்பதும் எதையுமே யூகிக்க இயலாததும்தான் பெரிய சவால்களாக இருந்தன என்பேன். எனினும் இந்தச் சவால்கள் சுவாரசியமானவை," என்று சொல்லும் பவானிக்கு ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் கனவாம்.
நடிக்க வருவதற்கு முன்பு புகைப்படக் கலைஞராக முயற்சி செய்துள்ளார். பிறகு நெருக்கமான நண்பர்களுடன் குறும்படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார். உதவி இயக்குநராகவும் செயல்பட்டுள்ளாராம்.
"இவையெல்லாம் திரைப்படத்துறை மீதான எனது ஆர்வத்தையும் எதிர்பார்ப்புகளையும் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றன. நடிப்பு என்று வரும்போது, நாம் இன்னொருவராக மாற வேண்டியிருப்பதையும் ரசித்தேன். அனைத்தையும் மீறி இந்தத் துறையில் கிடைக்கும் பெயர், புகழ், பணம் ஆகியவையும் கவர்ச்சிகரமான அம்சங்கள்," என்கிறார் பவானி.
, :
தமிழகத்

