'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இசை, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் அப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
ஏற்கெனவே 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் வசூலில் அசத்தியுள்ளது. விமர்சன ரீதியாகவும் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
'பொன்னியின் செல்வன்' முதல்பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைவிட இரண்டாம் பாகத்துக்கு பலத்த வரவேற்பு கிடைக்கும் என படக்குழு எதிர்பார்ப்பதாக ஜெயம் ரவி தெரிவித்தார்.
"இவ்வாறு எதிர்பார்ப்பதற்கு ஏற்ப படம் சிறந்த படைப்பாக உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் உள்ள உணர்வுபூர்வமான காட்சிகள் அடுத்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளன.
"முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. மேலும், முதல்பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் எனக்கான பகுதிகள் அதிகமாக இருக்கும். அதேசமயம் எல்லோருக்கும் படத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
"கடந்த 20 ஆண்டுகளில் குறைவான படங்களில்தான் நடித்துள்ளேன். நிறைய படங்களில் நடிக்கவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றவும் விரும்புகிறேன். இந்த ஆண்டு எனது நடிப்பில் நான்கு படங்கள் வெளிவரும்," என்றார் ஜெயம் ரவி.
இந்தப் படத்தில் நடிக்க தமக்கு வாய்ப்பு கிடைத்ததே மிகப்பெரிய பாக்கியம் என்றார் நடிகர் ரகுமான். இதுபோன்ற பிரம்மாண்ட படைப்பில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறி உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
"இந்தப் படத்தில் நடித்தது பெரிய கனவைப் போல் உள்ளது. படத்தின் இறுதிக்காட்சி என்னை வெகுவாகக் கவர்ந்தது. இப்படத்தில் நடித்த எல்லோரும் அதில் இருப்போம்," என்றார் ரகுமான்.
நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், ஒரு ரசிகனாக தானும் பட வெளியீட்டை எதிர்பார்த்து பல மாதங்கள் ஆவலுடன் காத்துக் கிடந்ததாகக் குறிப்பிட்டார்.
முதல் பாகத்துக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார் ஐஸ்வர்யா ராய்.
"ரசிகர்களைப் போன்றுதான் இப்படத்தில் பங்கேற்ற அனைவரும் அதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி," என்றார் ஐஸ்வர்யா.
"மணிரத்னம் இயக்கத்தில் நடித்தால் போதும் என்பதே எனது இலக்காக இருந்தது. சிறு கதாபாத்திரமாக இருந்தாலும், ஒரு காட்சியில் மட்டும் நடிக்கச் சொன்னாலும் செய்திருப்பேன்.
"ஆனால் பூங்குழலி என்ற அருமையான வேடத்தைக் கொடுத்தார் இயக்குநர். அப்பாத்திரம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. பெருமையாகக் கருதுகிறேன்," என்றார் ஐஸ்வர்யா லட்சுமி.

