சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி சிலர் எதிர்மறையாக விமர்சிப்பதையும் கிண்டல் செய்வதையும் அறவே கண்டுகொள்வதில்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
'நடிகையர் திலகம்' படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததுதான் தாம் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"என்னால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா?' என்று சந்தேகம் கிளப்பினர். படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அந்த விமர்சனங்கள் எனது கவனத்துக்கு வந்தன.
"கேலி, விமர்சனங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.
"உண்மையில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் பயந்தேன். அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கமும் இருந்தது.
"ஆனால் இயக்குநர் நாக அஸ்வின் என்னை ஊக்கப்படுத்தினார். 'இந்த கதாபாத்திரத்தை உங்களால் செய்ய முடியும்' என்று தொடர்ந்து கூறினார்.
"அவரே என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தபோது என்னை நான் ஏன் நம்பக் கூடாது என நினைத்துதான் அந்த படத்தில் நடித்தேன். அதற்குப் பலன் கிடைத்தது," என்கிறார் கீர்த்தி.

