'ராவணத் தோட்டம்' படத்துக்காக வெயிலில் வாடி, வதங்கி நடித்ததாகச் சொல்கிறார் அதன் நாயகி கயல் ஆனந்தி.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் இப்படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றது என்றும் ஒட்டுமொத்த படக்குழுவும் எந்தவித வசதியும் இன்றி படப்பிடிப்புக்காக உழைத்ததாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"கொரோனா நெருக்கடிக்கு முன்பே இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். ஆனால், படத்தை முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துவிட்டேன். எம்பிஏ பட்ட மேற்படிப்பையும் முடித்துள்ளேன்.
"எனினும், இந்தப் படத்தின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்புகளும் சிறிதும் குறையவில்லை. ரசிகர்களைப் போலவே ஒட்டுமொத்த படக்குழுவினரும் பட வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்துக் கிடந்தோம்," என்கிறார் ஆனந்தி.
ராமநாதபுரத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்போது பொதுமக்கள் வெளியே நடமாட அஞ்சி வீட்டுக்குள் முடங்குவது வழக்கம். ஆனால், அந்தக் கடும் வெயில் காலத்திலும் இடைவெளி இன்றி பல நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினாராம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.
"படப்பிடிப்பு நடந்த ஊரில் ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே ஆங்காங்கே தென்பட்டன. ஒதுங்குவதற்கு நிழல்கூட இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், ஒவ்வொரு காட்சியும் தாம் எதிர்பார்த்தபடி அமைய வேண்டும் என்பதில் இயக்குநர் பிடிவாதமாக இருந்தார்.
"கேரவேன்கள் இருந்தாலும் காட்சிகளுக்கு இடையேயான ஓய்வின்போது இந்த வாகனங்களுக்குள் நாங்கள் செல்ல முடியாது. காரணம் குளிர்சாதன அறையில் அமர்ந்து ஓய்வெடுத்தபின் மீண்டும் கேமரா முன் நிற்கும்போது வெயிலின் கடுமையைத் தாங்க முடியாது.
"இதை உணர்ந்துதான் இயக்குநர் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். தொடர்ந்து வெயிலில் நின்றுவிட்டால் அது கடுமையாக இருந்தாலும் போகப்போக பழகிவிடும் என்று அவ்வப்போது அறிவுறுத்துவார்.
"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியபோது நான் அணிந்து நடித்த உடைகள் எதையும் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது அணிய முடியவில்லை. எனது உடல் சற்று பெருத்துவிட்டதாலும் ஆடைகள் சற்றே சுருங்கிவிட்டதாலும் சிரமப்பட்டேன்.
"இதே போல் படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இவை அனைத்தையும் மனதிற்கொண்டு சில ஏற்பாடுகளை முன்பே செய்து வைத்திருந்தார் இயக்குநர். எனக்கு மீண்டும் உடைகள் தைக்கப்பட்டன. அவற்றில் சிறு மாற்றமும் இல்லாமல் தையல் கலைஞர் பார்த்துக்கொண்டார்.
"அதே போல் படப்பிடிப்பையும்கூட வெயில் காலத்தில்தான் நடத்தினார் இயக்குநர் விக்ரம். வெயில் காலம் முடிந்துவிட்டால் அடுத்த ஆண்டு வரை காத்திருந்தார். இந்த அளவுக்கு நேர்த்தியை எதிர்பார்க்கும் இயக்குநர்கள் மிகக் குறைவு.
"அந்த வகையில் திறமை வாய்ந்த இயக்குநரின் படத்தில் நடித்த மனநிறைவு கிடைத்துள்ளது. என்னுடன் பணியாற்றிய அனைவருமே கடுமையாக உழைத்தனர். குறிப்பாக, கதாநாயகன் சாந்தனுவின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது.
"குறிப்பிட்ட ஒரு காட்சியை நண்பகல் வேளையில் படம்பிடித்தனர். அந்தக் காட்சியில் காலணி ஏதும் அணியாமல் தார் போடப்பட்டுள்ள சாலையில் அவர் ஓடினார். அதிலும் சில தவறுகள் காரணமாக அந்தக் காட்சி நான்கைந்து முறை எடுக்கப்பட்டது. இதனால் சாந்தனுவின் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டன.
"ஆனால், காட்சி படமாக்கப்பட்டு முடியும் வரை அவர் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. அந்தக் காட்சியில் மட்டுமே அவரது முழுக் கவனமும் இருந்தது. பின்னர்தான் அவரது காலில் ஏற்பட்ட வெப்ப கொப்புளங்களைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.
"அதன் பின்னர் சிகிச்சை பெற்றார் சாந்தனு. எனினும், இதே போல் மேலும் பல காட்சிகளில் அவர் நடித்திருந்தார். சாந்தனு நிச்சயம் முதல் வரிசை நடிகராக உயர்வார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
"பொதுவாக, நடிகர், நடிகைகள் மட்டுமே இதுபோல் சிரமப்படுவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். உண்மையில், படக்குழுவில் உள்ள அனைவருமே இத்தகைய சிரமங்களை எதிர்நோக்குவர்," என்கிறார் ஆனந்தி.
, :
தமிழகத்

