'கென்னடி கிளப்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் மீனாட்சி கோவிந்தன். தற்போது இரண்டு தமிழ்ப் படங்கள், இணையத்தொடர் என்று நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அருள்நிதி நாயகனாக நடிக்கும் 'டிமாண்டி காலனி 2' படத்தில் மீனாட்சிக்கு முக்கியமான கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
"எனக்கான வாய்ப்புகள் தொடர்ந்து தேடி வருகின்றன. இதற்காக ரசிகர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். திரையுலகில் நான் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் எனக்கென்று ரசிகர்கள் தங்கள் மனதில் ஓர் இடத்தை அளித்துள்ளனர்.
"இதற்கு முன்பு 'வேலன்', 'வீரபாண்டியபுரம்' ஆகிய படங்களில் நடித்த அனுபவம் இப்போது வெகுவாகக் கைகொடுக்கிறது. மேலும் விக்ரமுடன் நடித்த 'கோப்ரா' படத்தில் எனது தனித்துவமான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிட்டனர். அதை எனக்கான பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்," என்று சொல்லும் மீனாட்சி அசல் தமிழ்ப் பெண்.
பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை மாநகரில்தானாம். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் சென்னையிலேயே கல்லூரிப் படிப்பையும் முடித்துள்ளார்.
இவரது தந்தையும் இயக்குநர் பாரதிராஜாவும் நெருக்கமான நண்பர்களாம். பாரதிராஜா தன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம்.
"சரியான வாய்ப்பு கிடைக்கும்போது நடிக்க வரலாம் என்று பாரதிராஜா கூறுவார். நானும் அவ்வாறு நினைத்துதான் காத்திருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்ததும் கிடைத்த வாய்ப்புதான் 'கென்னடி கிளப்'.
"அந்த நல்ல வாய்ப்பு வந்தபோது அதைத் தவறவிட வேண்டாமே என்று என் மீது பாசம் கொண்டவர்கள் தெரிவித்தனர். அதனால் கல்லூரி காலத்திலேயே நடிக்கத் தொடங்கினேன்.
"அப்போது இந்தத் துறை எனக்கு மேலும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. தொடக்கத்தில் இருந்தே நான் கலையார்வம் மிக்கவள் என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
"கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். அதனால், சினிமாவில் நடிக்கப்போவதாகச் சொன்னதும் குடும்பத்தார் முழு ஆதரவையும் கொடுத்தார்கள்," என்று சொல்லும் மீனாட்சி, 'கென்னடி கிளப்' படத்திற்கு முன்பே 'கோப்ரா' படத்தில் ஒப்பந்த மாகிவிட்டார்.
நடிப்புத் தேர்வில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்த பிறகே அந்தப் படத்தில் நடிக்கத் தேர்வானாராம்.
அதில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிக கவனம் கிடைத்தது என்றும் இதன் மூலம் மேலும் பல ரசிகர்களைச் சென்றடைய முடிந்தது என்றும் சொல்கிறார்.
"வளர்ந்து வரும் எந்தவொரு நடிகருக்குமே இதுபோன்ற பெரிய படங்களில் கிடைக்கும் வாய்ப்பு முக்கியமானது. இந்தப் படத்திற்காக எனக்குப் பல தரப்பிடம் இருந்து பாராட்டுகளும் வந்து சேர்ந்தன. 'இவ்வளவு பெரிய நடிகருடன் நாம் வேலை பார்த்திருக்கிறோம்' என்று நினைக்காத அளவுக்கு மிகவும் எளிமையாகப் பேசிப் பழகினார் விக்ரம்.
'கோப்ரா' படத்தை விளம்பரப்படுத்த நிறைய ஊர்களுக்குச் சென்றோம். ரசிகர்களின் அன்பு குறித்து விக்ரம் சார் ஒரு விஷயம் சொன்னார்.
"நமக்கு இத்தனை அன்பு தருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு நாம் நல்ல படங்கள் தருவதைத் தவிர வேறு ஒன்றும் திருப்பித் தரப்போவதில்லை. அதனால், கதை, கதாபாத்திர தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அந்த அறிவுரை எப்போதுமே எனக்கு நினைவில் இருக்கும்.
"பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் கடந்து நல்ல படங்கள், கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் நம்மை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என விரும்புகிறேன். அதையும் கடந்து அவரிடம் ஒரே ஒரு நாளாவது உதவியாளராக இருக்கவேண்டும் என்பதும் எனது ஆசை," என்கிறார் மீனாட்சி.
, : தமிழகத்

